நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூலை 9: தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தேனியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நீலக்கணலன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் மாவீரன் முன்னிலை வகித்தார்.

இதில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடுக்கப்பட்டோர் பிரிவு மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மமக மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தேனீ ராயன், வெல்பர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது சபி, மக்கள் அதிகார போடி நகரச் செயலாளர் கணேசன், ஆதித்தமிழர் தொழிலாளர் அணி மாநில செயலாளர் ஈழவேந்தன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், கோவிலாங்குளம் அழகேந்திரன் படுகொலையை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன. இதில் தேனி நகரத் தலைவர் நாச்சியம்மாள், மாவட்ட நிதி செயலால் சரிதா, மாவட்டத் துணைச் செயலாளர் மலைச்சாமி, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் வீரஜோதி உள்பட படர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி