நீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பு அணை சுற்றுலாதலமாக்கப்படுமா?.. முதல்வருக்கு, பொதுமக்கள் கோரிக்கை

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் கோரையாறு தலைப்பு அணையை திமுக ஆட்சியில் சுற்றுலா தலமாக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் நகர் ஊராட்சியில் உள்ளது கோரையாறு தலைப்பு அணை (மூணாறு தலைப்பு). இந்த அணை 1874ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பெரிய வெண்ணாற்றில் வந்து மூணாறு தலைப்பு அணைக்கு வந்தடைகிறது. அங்கிருந்து பாமனியாறு, கோரையாறு, சிறிய வெண்ணாறு என மூன்று ஆறுகள் பிரிந்து பாமனியாற்றில் 38,357 ஏக்கரும், கோரையாற்றில் 1,20,957 ஏக்கரும், சிறிய வெண்ணாற்றில் 94,219 ஏக்கர் விளைநிலங்களும் சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர் காலங்களில் மூணாறு தலைப்பில் விதவிதமான மீன்கள் துள்ளி விளையாடும் காட்சிகளும், இயற்கை சூழல் மிகுந்த இடமாகவும், ஆறுகளில் சீரிப்பாயும் தண்ணீரையும் பார்ப்பதற்கு இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுற்றுலாபோல் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வரும் காணும் பொங்கல் அன்று பெண்கள் குடும்பத்துடன் வந்து மூணாறு தலைப்பில் தங்கி ஆற்று நீரில் சாமி கும்பிட்டு போவது வழக்கம். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அவசர மற்றும் பேரிடர் காலங்களில் தங்கி சென்ற இடமாகவும் இருந்தது. தற்போது அந்த இடம் 100 ஆண்டுகள் பழமையானதாலும், கட்டிடத்தில் பழுது உள்ளதாலும் யாரும் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் பல்வேறு அரசியல் அமைப்புகள், தொண்டு அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா தலமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையறிந்த முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சட்டசபையில் 110 விதிபடி மூணாறு தலைப்பு அணை சுற்றுலா தலமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு அங்குள்ள மூன்று ஆறு சட்ரஷ்களிலும் வர்ணம் பூசப்பட்டு அங்கு உடனே உயர் கோபுர விளக்கும் அமைக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த அறிவிப்பு அதிமுக எடப்பாடி ஆட்சியில் அறிவிப்பாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தற்போது மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்….

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்