நில ஒப்பந்தத்தில் 20 பேரிடம் முறைகேடு விவகாரம்; ரூ.20 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது: வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற போது சிக்கினர்

ஐதராபாத்: நில ஒப்பந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக ரூ. 20 கோடி மோசடி செய்த தந்தை மற்றும் மகனை ஐதராபாத் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் டோலிச்சோக்கி அடுத்த சூர்யா நகர் காலனியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி காஜா முஜீபுதீன் (61) மற்றும் அவரது மகன் முகமது ஜாஜிம் முஜீப் (26) ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு டோலிச்சவுக்கியில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கினர். அதாவது குறிப்பிட்ட இடத்தில் நிலத்தை வாங்கி, அதனை பகிர்ந்து கொள்ளும் வகையில் திட்டத்தை தயாரித்தனர். இதற்காக பலரிடம் பணம் வசூலித்தனர். ஒவ்வொருவரும் 50 சதவீத தொகையை முதலில் கொடுத்தால் போதும் என்ற அடிப்படையில் பணத்தை வசூல் செய்தனர். இதற்காக ஒப்பந்த பத்திரங்களை பதிவு செய்து கொடுத்தனர். ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் மேற்கண்ட இருவரும், தங்களது பங்குதாரர்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கவில்லை. அதிர்ச்சியடைந்த அவர்கள், இருவரிடமும் முறையிட்டனர். அவர்கள் சரியான பதிலை கூறாததால், பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக  தந்தை மற்றும் மகன் மீது ஐதராபாத் மத்திய குற்றப்பிரிவு (சிசிஎஸ்) போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினர். அதையடுத்து தலைமறைவாக இருந்த காஜா முஜீபுதீன் மற்றும் அவரது மகன் முகமது ஜாஜிம் முஜீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து ஏசிபி அசோக் குமார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட இருவரும், நில ஒப்பந்தத்தைக் காட்டி முதலீட்டு வைப்புத் தொகையாக உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கிட்டத்தட்ட ரூ.20 கோடி வசூலித்துள்ளனர். கிட்டதட்ட 20 பேர் இருவரிடமும் ஏமாந்துள்ளனர். தொழிலில் தங்களது பணத்தை முதலீடு செய்யாமல், பொதுமக்கள் கொடுத்த பணத்தை தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செலவு செய்து, இருவரும் பினாமிகள் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். இருவர் மீதும் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட இருவரும், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றனர். அதற்குள் இருவரையும் கைது செய்துள்ளோம்’ என்று கூறினார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!