நிலத்திற்கு செல்ல தொடர்ந்து தடை விதித்ததால் விவசாயியை சுட்டு கொல்ல முயன்ற அண்ணன் மகன் கைது

போளூர்: தங்களது விவசாய நிலத்திற்கு செல்ல தொடர்ந்து தடை விதித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், தனது சித்தப்பாவான விவசாயியை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றார். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை தாலுகா பலாக்கானூர் மோட்டுக்கொல்லை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது தம்பி துரைசாமி. இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்துடன் அரசு புறம்போக்கு இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். துரைசாமிக்கு 3 ஏக்கர் நிலமும், கோவிந்தனுக்கு 2 ஏக்கர் நிலமும் இருந்துள்ளது. இதில் துரைசாமியின் நிலத்தை கடந்துதான் கோவிந்தன் நிலத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில் கோவிந்தனின் மகன் ஏழுமலை (22), நிலத்திற்கு சென்றபோது கடந்த 3 நாட்களாக துரைசாமி விரட்டினாராம். இதனால் ஏழுமலை வேதனையடைந்தார். நேற்று மதியம் துரைசாமி, தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஏழுமலை நாட்டு துப்பாக்கியுடன் வந்து திடீரென சுட்டுள்ளார். இதில் துரைசாமியின் வயிறு மற்றும் கைகளில் குண்டு பாய்ந்து பலத்த காயத்துடன் மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடி வந்து மீட்டனர். ஏழுமலை தப்பி ஓடினார்.தகவலறிந்து கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துரைசாமியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய ஏழுமலை, நாட்டு துப்பாக்கியுடன் ஜம்னாமரத்தூர் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது