நிலங்களை பாதுகாத்து, பராமரிக்க பிராப்பர்டி மேனேஜ்மென்ட்

மாற்றி யோசித்த சாப்ட்வேர் இன்ஜினியர்சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் என்பது பழமொழி. கடந்த காலங்களில் படித்தவர்கள் அரசு, தனியார் துறைகளில் வேலை தேடினர். அதற்காக தங்களை தயார் படுத்தியும் வந்தனர். தற்போதும் தயார் செய்து வருகின்றனர். இருப்பினும் அரசு, தனியார் துறைகளில் வேலை செய்து வரும் பலர் விவசாயத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். இது ஆரோக்கியமானதாகவே கருதப்படுகிறது. இதில் குறிப்பாக பொறியியல் பட்டதாரிகள் விவசாயத்தில் கால்பதித்து சாதித்து வருகின்றனர். விவசாயம் செய்வது ஒருபுறம் இருக்கையில், குமரியை சேர்ந்த ஒரு பொறியாளர் தனியார் நிலங்களை பாதுகாத்து பராமரிக்கும் தொழிலை செய்து வருகிறார். இதற்காக அவர் ஒரு தனியார் கம்பெனியை நடத்தி வருகிறார். அதில் தனக்கு கீழ் சிலரை வேலைக்கு சேர்த்து நிலங்களை பாதுகாப்பது, பராமரிப்பது போன்ற பணிகளை செய்து தருகிறார். இதுகுறித்து அறிந்த பலர் தங்களது நிலத்தையும் பாதுகாத்து பராமரிக்க அவரை அணுகி வருகின்றனர்.அதற்காக நில உரிமையாளர்களிடம் இருந்து சம்பளமும் பெற்று வருகிறார். இந்த தொழில் செய்வதால் மனதிற்கு திருப்தியாக இருப்பதாக குமரி மாவட்டம் தாழக்குடியை சேர்ந்த இன்ஜினியர் சிதம்பரதாணு கூறியுள்ளார். ‘‘விவசாய பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவன். பொறியியல் பட்டம் பெற்ற நான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் நிறுவனத்துல 7 வருடம் பணியாற்றினேன். பல ஆயிரங்கள்ல சம்பளம் கிடைத்தது. ஆனால் எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்பதே ஆசை. கடந்த சில வருடத்திற்கு முன்பு எனது உறவினர் ஒருவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றார். அப்போது அவரது தென்னந்தோப்பை பார்த்துக்கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். விவசாயத்தில் ஆர்வம் இருப்பதால் நானும் ஒப்புக்கொண்டேன். உறவினர் வரும்வரை அந்த நிலத்தை பாதுகாத்து, சீர்படுத்தி, பராமரித்து வந்தேன். உறவினர் கையில் கொடுத்தேன். தோப்பை ஒழுங்குபடுத்தி முறையாக பாத்தி கட்டி வைத்திருந்தது அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரொம்பவே பாராட்டினார். அப்போது எனது மனதில் வெளியூர், வெளிநாடுகளில் குடும்பத்துடன் இருப்பவர்களின் நிலங்களை பாதுகாத்து பராமரிக்கும் தொழிலை நாம் ஏன் நிறுவனம் அமைத்து செய்யக் கூடாது என தோன்றியது. மேலும் எனது உறவினரின் நிலத்தை பராமரித்ததால் வேறு நிலங்கள் வந்தாலும் பராமரிக்கலாம் என எனக்குள் ஒரு தைரியம் வந்தது. டெக்னோ வேலை செய்ததை விட்டுவிட்டு, கடந்த 2 வருடத்திற்கு முன்பு ‘பிராப்பர்டி மானேஜ்மென்ட்’ என்னும் நிறுவனத்தை தொடங்கினேன். நிறுவனத்தில் சிலரை வேலைக்கு சேர்த்துக் கொண்டேன். முதலில் குறைந்த அளவு நிலங்கள் வந்தது. பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் குடும்பத்துடன் இருக்கும் குமரியை சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு தங்களது நிலத்தை பாதுகாத்து பராமரிக்க கேட்டுக்கொண்டனர். தற்போது 11 நிலங்களை எனது நிறுவனம் பாதுகாத்து பராமரித்து வருகிறது. நிலத்தை பாதுகாக்கும்போது ஒரு குறிப்பிட்ட தொகை மாதம் தோறும் உரிமையாளர்களிடம் இருந்து பெறுவோம். நில உரிமையாளர்கள் அந்த நிலத்தில் பயிர் செய்ய வேண்டும் என என்னிடம் கூறுவார்கள். நான் அந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்தால், மகசூல் அதிகம் கிடைக்கும் என மண் பரிசோதனை செய்து,  என்ன பயிர்கள் சாகுபடி செய்தால், மகசூல் அதிகம் கிடைக்கும் என தெரிவிப்பேன். அவர்கள் பயிரிடுமாறு கூறியதும் அதனை பயிரிடுவேன். நிலங்கள் உள்ள பகுதியை சுற்றியுள்ள வேலையாட்களை அமர்த்தி நாங்கள் பராமரிக்கும் நிலங்களில் விவசாய வேலைகள் செய்வோம். சம்பளமாக தினமும் ₹700 வீதம் உரிமையாளர்களிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம். வேலை நடைபெறுவதை கண்காணிப்பில் ஈடுபடும் எனது கம்பெனிக்கு சர்வீஸ் கட்டணமாக ₹200 முதல் ரூ.500 வரை உரிமையாளர்களிடம் இருந்து வாங்குவேன்.தென்னந்தோப்புகளில் தேங்காய் வெட்டும்போது கிடைக்கும் வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என புள்ளிவிவரங்கள் அனைத்தும் கொடுத்துவிடுவோம். மேலும் ஒரு வருடத்திற்கு நிலத்தில் செய்த பணிகள், செலவு செய்தது, நிலத்தில் இருந்து கிடைத்துள்ள வருமானம் என அனைத்தையும் தெள்ள தெளிவாக தந்துவிடுவோம்.  தவிர எங்கள் நிறுவனத்துக்கு வேளாண்மை துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறார். நாங்கள் பராமரிக்கும் தோப்புகளுக்கு அவரை அழைத்து மகசூல் அதிகமாக கிடைக்க என்ன வழி செய்யலாம், நோய் தாக்காமல் இருப்பதற்கு என்ன மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை பெறுவோம். அவர் சொல்லும் ஆலோசனையை உரிமையாளர்களிடம் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்துவோம். இதனால் நாங்கள் பராமரிக்கும் தோப்புகளில் மகசூலும் அதிகமாக கிடைக்கிறது.தற்போது குமரியை சுற்றியுள்ள தாழக்குடி, ஆளூர், தேரூர், ஆதரவிளை, கோழிகோட்டுபொத்தை போன்ற 11 இடங்களில் நிலங்களை பராமரித்து, பாதுகாத்து வருகிறேன். என்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுத்தது போக எனக்கு மாதம்தோறும் சராசரியாக ₹20 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. டெக்னோபார்க்கில் வேலை செய்து கிடைத்த சம்பளத்தைவிட மிகக்குறைவு தான் என்றாலும், இந்த வேலையின் மூலம் கிடைக்கும் சம்பளம் மனதிருப்தியாக இருக்கிறது. தற்போது மேலும் பலர் தங்களது நிலங்களை பராமரித்து, பாதுகாக்க எங்களை அணுகி வருகின்றனர். நாளடைவில் அதிக ஆட்களை வைத்து தொழிலை விரிவுபடுத்த உள்ளேன்” என்கிறார். சிசிடிவி,வீடியோகாலில் பார்க்கலாம். வெளியூர், வெளிநாடுகளில் இருக்கும் நில உரிமையாளர்களுக்கு அவர்களது தோட்டங்களில் வேலை நடைபெறுவதை போட்டோ எடுத்து அனுப்புவோம். அதுபோல் உரிமையாளர்களுக்கு வீடியோ கால் செய்து, வேலை செய்வதை நேரில் பார்க்குமாறு செய்வோம். சில நேரங்களில் உரிமையாளர்கள் வீடியோ காலில் வருவார்கள். வேலை செய்யும்போது உரிமையாளர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித ஒளிவுமறைவும் இருக்காது. இதனால் எங்கள் மேல் உரிமையாளர்கள் முழுநம்பிக்கை அதிகரிக்கும் என்று தனது நிறுவன நடைமுறை குறித்து சிதம்பரதாணு கூறினார்.தொடர்புக்கு: சிதம்பரதாணு 82489 14183 தொகுப்பு: ச.உமாசங்கர்  படங்கள்: ஆர்.மணிகண்டன்

Related posts

கரும்பு தந்த இனிய வாழ்வு!

மழைக்காலத்தில் பயிர்களைக் காக்கும் எளிய வழிகள்!

கால்நடைகளைக் காப்போம்!