நிர்வாகிகளின் கருத்துக்களை தலைமை கேட்பதில்லை மதிமுகவை கலைத்து விட்டு திமுகவில் இணையவேண்டும்: மாவட்டச் செயலாளர்கள் பரபரப்பு பேட்டி

சிவகங்கை: சிவகங்கை மதிமுக அலுவலகத்தில் நேற்று மதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் கூறியதாவது: கடந்த ஓராண்டாக மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. கட்சியின் சட்ட திட்டங்களை பொருட்படுத்தாமல் மாநில நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய வாக்காளர் பட்டியல் கேட்டோம். அதை தரவில்லை. தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை கேட்டு, அது குறித்து விவாதிக்க தலைமை தயாராக இல்லை.ஆனால் சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது. மக்களிடம், தொண்டர்களிடம் இருந்து கட்சி அந்நியப்பட்டு நிற்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் கட்சியில் இருந்து வருகிறோம். இக்கட்சியில் இருந்துதான் ஏராளமானோர் மற்ற கட்சிக்கு செல்கின்றனர். தன்னுடைய மகனுக்கு பதவி வழங்கி கட்சியின் கொள்கைக்கு விரோதமாக வைகோ முடிவெடுத்து செயல்படுகிறார். அவரது இந்த கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே இனி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு தாய் கழகமான திமுகவுடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். உடன் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் தங்கபாண்டியன், அவைத்தலைவர் ஜெயபிரகாஷ், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் மோகன், வழக்கறிஞரணி பாரதமணி உள்ளிட்டோர் இருந்தனர். பேட்டியின்போது அலுவலகத்திற்கு வெளியே மதிமுகவினர் 30க்கும் மேற்பட்டோர் கூடி வைகோவிற்கு ஆதரவாகவும், பேட்டியளித்த நிர்வாகிகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட துணைச் செயலாளர் சார்லஸ் கூறுகையில், ‘‘சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் தலைமையில் மதிமுக தொடர்ந்து செயல்படும்’’ என்றார். அப்போது மதிமுகவினர், ‘‘மூவரையும் அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்’’ என்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை டிஎஸ்பி பால்பாண்டி பேச்சுவார்த்தை நடத்தி வெளியே நின்ற மதிமுகவினரை கலைந்து போகச் செய்தனர். மேலும், அலுவலகப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது….

Related posts

சொல்லிட்டாங்க…

2026 தேர்தல் – திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: நாதக மாவட்ட செயலாளர் சுகுமார்