நித்திரவிளை அருகே சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

நித்திரவிளை, ஜூன் 12: நித்திரவிளை அருகே தேவர்விளை பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு செல்லும் சாலை கனமழையால் கடும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும் சாலையின் ஒரு பகுதியில் சுமார் ஒரு அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை பணியாளர்கள் கிராவல் மண் போட்டு நிரப்பி விட்டு சென்றனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளத்தில் போடப்பட்ட மண் மழைநீரில் கலந்து சாலையின் இருபுறமும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் அந்த பகுதி வழியாக நடந்து செல்ல பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி நிற்பதால், வாகன ஓட்டுநர்களுக்கு பள்ளத்தின் ஆழம் தெரியவில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிரே வரும் இருசக்கர வாகனத்திற்கு வழிவிடும் போது, நிலைதடுமாறும் நிலை உள்ளது. ஆகவே நெஞ்சாலைத்துறை பணியாளர்கள் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளி முன்னால் சாலையில் இருபுறமும் மழைநீர் வடிந்து செல்ல வடிகால் அமைத்து, ஜல்லி மற்றும் தார் கலந்து பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்