நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார் இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார்? எம்எல்ஏக்கள் வாக்களிக்க தலைமை செயலகத்தில் ஏற்பாடு

சென்னை: இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டி சென்னை வந்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 18ம் தேதி (நாளை) நடக்கிறது. அதன்படி, பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் வாக்குச்சீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர்.எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை தலைமை செயலக வளாகத்தில் இருக்கும் குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ள ஓட்டுப்பெட்டி கடந்த 12ம் தேதி பாதுகாப்புடன் விமானம் மூலம் தனி இருக்கையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. தலைமை செயலக துணை செயலாளர் ரமேஷ், துணை தேர்தல் அதிகாரி தர் ஆகியோர் விமான நிலையம் சென்று ஓட்டுப்பெட்டியை தலைமை செயலகத்துக்கு எடுத்து வந்தனர். பின்னர் பாதுகாப்பாக தலைமை செயலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை காலை வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு கொண்டு வரப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (18ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வேட்பாளர்களுக்கும் தலா மூன்று முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்குச்சீட்டில் ‘வைலட்’ கலர் பேனா மூலம் வாக்களிக்க வேண்டும். அதற்கான பேனா வாக்குப்பதிவு அலுவலகத்தில் தரப்படும். வாக்குச்சீட்டில் இரண்டு வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் ஒரு கட்டம் இருக்கும். அதில், எம்எல்ஏக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அந்த கட்டத்தில் ‘ஒன்று’ என்று எழுத வேண்டும். இரண்டாவது வேட்பாளர்களுக்கு, வாக்களிக்க விரும்பினால் ‘இரண்டு’ என்று எழுத வேண்டும். இரண்டு வேட்பாளர்களும் சமமான வாக்குகள் வாங்கியிருந்தால், இரண்டாவது வாக்கு எண்ணப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நாளை மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஓட்டுப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு, நாளை இரவே சென்னையில் இருந்து பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்எல்ஏக்களும் நாளை வாக்களிக்க உள்ளனர். 1971ம் ஆண்டு ஜனத்தொகை கணக்கெடுப்பின்படி ஒரு எம்எல்ஏ வாக்கு 176 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறும். அதேபோன்று, ஒரு எம்பியின் வாக்கு 700 மதிப்பு ஆகும். எம்எல்ஏக்கள் வாக்களிக்க ‘பிங்க்’ நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். எம்பிக்கள் வாக்களிக்க ‘கிரீன்’ நிறத்திலான வாக்குச்சீட்டு வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்பிக்களும், 233 மாநிலங்களவை எம்பிக்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை, 18 மாநிலங்களவை எம்பிக்கள் அடங்கும். நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி ஆகிய இரண்டு எம்பிக்கள்  சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றுள்ளனர். அதேபோன்று இந்தியா முழுவதும் உள்ள 4,033 எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஆகும். இதில் தமிழக எம்பிக்கள் (57 பேர்), எம்எல்ஏக்கள் (234 பேர்) வாக்குகள் 81 ஆயிரத்து 86 என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21ம் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறும். எம்எல்ஏக்கள் வாக்களிக்க ‘பிங்க்’ நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். எம்பிக்கள் வாக்களிக்க ‘கிரீன்’ நிறத்திலான வாக்குச்சீட்டு வழங்கப்படும்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு