நாளை முதல் 11 நாட்கள் புத்தக திருவிழா

கரூர், அக். 2: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் பிரேம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம், பபாசியுடன் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அக்டோபர் 3ம் தேதி அன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களிடமும் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்து அறிவு சார்ந்த சமூதாயத்தை உருவாக்கும் வகையில் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்தாண்டு கரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

 11 நாட்கள்: அதே போன்று இந்தாண்டும் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரூர் புத்தக திருவிழா – 2024 அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 11 நாட்கள் கருர் பிரேம் மஹாலில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பயன்பெறவும், கலை மற்றும் இலக்கியம் நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 மின்நூல்கள்: இதில், கரூர் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், மாணவர்களுக்கு பயன்படும் மின்நூல் மற்றும் மின்பொருண்மை, பதிப்பாளர்களின் படைப்புகளை கொண்ட விற்பனையகங்கள் அமைத்திடவும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
 பிராய்லி வாசிப்பு: மேலும், அரசுத்துறைகளின் திட்டங்கள் குறித்த அரங்குகள், வாசிப்பு அரங்குகள், பார்வையற்றோருக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி ஒலி அமைப்புடன் கூடிய அரங்குகள் இடம் பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்க நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நூல் விற்பனையகங்கள் அனைத்து புத்தக கண்காட்சிக்கு வருபவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் வரிசைப் படுத்தி அமையும் வகையில் அரங்குகள் அமைக்கவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 உள்ளூர் படைப்புகள் காட்சி: உள்ளுர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அரங்குகளில் கரூர் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி அந்த படைப்புகள் சார்ந்த உரையாடல் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரூரில் நடைபெறவுள்ள இந்த புத்தக கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. கரூரில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் புத்தக ஆர்வலர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையிலான புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை