நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் படுகாயம்

 

திருத்தணி: ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட இ.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (45). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களான ராதா(40), குமார் (42), ரமணி (35), ராணி (60), சந்தியா (30), கீர்த்தி (26) மற்றும் ஒரு வயது சிறுமி லட்சுமி ஆகியோருடன் நேற்று திருத்தணி அடுத்த மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயிலுக்கு பேருந்தில் சென்றுள்ளனர்.

அப்போது, பொன்பாடி பேருந்து நிலையத்தில் இவர்கள் அனைவரும் இறங்கி, அங்கிருந்து மத்தூர் கோயிலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்று உள்ளனர். ஆட்டோவை மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கோயிலுக்கு அருகே ஆட்டோ சென்றபோது, திடீரென சாலையில் குறுக்கே நாய் ஓடி வந்தது. ஆட்டோ நாய் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் அடித்துள்ளார்.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவறிந்து திருத்தணி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு 8 பேரும் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்