நாமக்கல் நகரில் நாளை போக்குவரத்தில் மாற்றம்

நாமக்கல், அக்.21: தமிழக முதல்வர் வருகையையொட்டி, நாமக்கல் நகரில் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்து காவல்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(22ம் தேதி) நாமக்கல் வருகிறார். பரமத்திவேலூர் ரோட்டில் செலம்பகவுண்டர் பூங்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள 8 அடி உயர கலைஞர் சிலையை, பகல் 12 மணியளவில் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு, பொம்மகுட்டைமேட்டில் நடைபெறும் அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், 15 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழாவில், முடிவடைந்த திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். இதனையொட்டி, விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதல்வர் வருகையை தொடர்ந்து நாமக்கல் நகரில் போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடைபெற்றது. ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி தனராசு முன்னிலை வகித்தார். முதல்வர் வருகையையொட்டி, நாமக்கல் நகரில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, இன்ஸ்பெக்டர் கபிலன் விளக்கினார்.

பின்னர், அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர்கள் வருகையையொட்டி, நாமக்கல் நகரில் நாளை (22ம் தேதி) காலை 7 மணி முதல், மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வாகனங்களும் இதை கடைபிடிக்க வேண்டும். சேலம் பகுதியில் இருந்து நாமக்கல் வரும் வாகனங்கள் புதன்சந்தை, சேந்தமங்கலம், வேட்டாம்பாடி, அண்ணாநகர், கொசவம்பட்டி வழியாக நாமக்கல் வரவேண்டும். திருச்செங்கோட்டில் இருந்து வரும் வாகனங்கள் நல்லிபாளையம் நயாகரா பங்க், பொய்யேரிக்கரை, உழவர் சந்தை, பார்க் ரோடு வழியாகவும், மோகனுர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அய்யப்பன் கோயில் வலது புறம் திரும்பி ஸ்டேட் பேங்க் வழியாகவும், பரமத்தியில் இருந்து வரும் வாகனங்கள் ஏடிசி டெப்போக்கு முன்பாக இடது புறம் திரும்பி பொய்யேரிக்கரை, உழவர் சந்தை, பார்க் ரோடு வழியாகவும், திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கமான வழியிலும் நாமக்கல் நகருக்குள் வர வேண்டும். இதனை நாமக்கல் நகருக்கு வாகனங்களில் வரும் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நாமக்கல் நகரில் மெயின்ரோடு மற்றும் திருச்சி ரோடு, பரமத்தி ரோடு, திருச்செங்கோடு ரோடு, மோகனூர் ரோடு போன்ற பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு முன்பாக வைத்துள்ள விளம்பர போர்டுகளை அகற்றிக் கொள்ள வேண்டும். மேலும், ஒரு பொறுப்பாளரை நியமித்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து வாகன உரிமையாளர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் 22ம் தேதி ஒருநாள் போக்குவரத்துக்கு இடையூறின்றி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சீரங்கன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி