நாமக்கல் நகராட்சி பகுதியில் சேகரமான 50 ஆயிரம் டன் குப்பையை அகற்ற ₹3 கோடி ஒதுக்கீடு-விரைவில் டெண்டர் விட ஏற்பாடு

நாமக்கல் : நாமக்கல் நகராட்சியில் தேங்கியுள்ள 50 ஆயிரம் டன் குப்பைகளை அகற்ற ₹3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நகரை அழகுபடுத்தவும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 35 ஆயிரம் குடியிருப்புகளும், 10 ஆயிரம் வணிக நிறுவனங்களும் இருக்கிறது. இதன்மூலம் தினமும் 45 டன் குப்பைகள் சேகரமாகிறது. நகராட்சி பணியாளர்கள் வீடுதோறும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வாங்கி வருகிறார்கள். குப்பைகளை பிரித்து கொடுக்க வலியுறுத்தி 39 வார்டுகளிலும் நகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.தினமும் நகராட்சி பணியாளர்கள் 300 பேர் வீடு, வீடாக சென்று சேகரிக்கும் குப்பைகளில் 10 டன் மக்காத குப்பைகள் வருகிறது. இவற்றை ஒரே இடத்தில் கொட்டி வைத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நகராட்சி நிர்வாகம் ₹50 ஆயிரம் வரை செலவு செய்து, தினமும் 10 டன் குப்பைகளை அரியலூரில் உள்ள சிமெண்ட் பாக்டரிக்கு அனுப்பி வைத்து வருகிறது.மேலும், மக்கும் குப்பைகளை, நகரில் 4 இடங்களில் கொட்டி வைத்து (சிறிய உர தயாரிப்பு நிலையங்கள்) அங்கு குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தினமும் 5 டன் இயற்கை உரம், நகராட்சி குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் கொசவம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைகிடங்கு உள்ளது. இங்கு பல ஆண்டாக கொட்டப்பட்டுள்ள குப்பை மலைகுன்று போல குவிந்துள்ளது.இவற்றை அப்புறப்படுத்த கடந்த காலங்களில் நகராட்சி எடுத்த நடவடிக்கை பெரிய அளவில் பயன் அளிக்கவில்லை. நீண்ட காலமாக குப்பை கிடங்கு மலை போல இருப்பதால், அருகில் உள்ள பகுதியில் நிலத்தடிநீர் மாசுபட்டுவிட்டது. இதனால், கருப்பு நிறத்தில் தண்ணீர் வருகிறது. இதை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.  குப்பை கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசு ₹3 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்ற விரைவில் டெண்டர் விடப்படுகிறது.சமீபத்தில் அண்ணா பல்கலைகழக பொறியியல் பிரிவு மாணவர்கள் இந்த குப்பை கிடங்கை பார்வையிட்டனர்.அவர்கள் எடுத்த கணக்கெடுப்பின் படி 50 ஆயிரம் டன் குப்பை இந்த கிடங்கில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவற்றை முழுமையாக அகற்றி அந்த இடத்தை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா கூறுகையில், நாமக்கல் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு இயக்கம் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1.50 லட்சம் மக்கள் வசிக்கும் நகரில், 400 பணியாளர்களை வைத்து நகரை சுத்தமாக வைத்திருக்க முடியாது. நகரம் சுத்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படவேண்டும். குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்கவேண்டும். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மாற்றம் ஏற்பட்டால் தான் நகரம் தூய்மையாக இருக்கும். மாதம்தோறும் 2வது மற்றும் கடைசி சனிக்கிழமைகளில், அரசின் உத்தரவுப்படி விழிப்புணர்வு நடவடிக்கைகள் நகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், என்றார்….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு