நாமக்கல் கலெக்டர் நேரில் சென்று பாராட்டு அரை கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தை-80 நாள் தொடர் சிகிச்சையில் அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்

நாமக்கல் : நாமக்கல்லில் குறைப்பிரச பெண் குழந்தையை 80 நாட்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றிய டாக்டர்களை கலெக்டர் பாராட்டினார்.நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த சாதனா (31). விக்னேஷ் தம்பதியினருக்கு கடந்த 1ம் தேதி சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரு குழந்தைகளும் எடை குறைவாக ஒன்று 525 கிராம், மற்றொரு குழந்தை 720 கிராம் எடையில் இருந்தது. இதனால் அதே மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர்.சுமார் ஒரு மாதம் அங்கு சிகிச்சை மேற்கொண்டும் குழந்தைகளின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து 33 நாள் கடந்தபிறகு, அக்குழந்தைகளை குழந்தையின் பெற்றோர்கள் வெண்டிலேசன் வசதி கொண்ட சிறப்பு அவசர சிகிச்சை ஊர்தி மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சில நாட்களில் இரட்டைக் குழந்தைகளில் 720 கிராம் எடை கொண்ட ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. அதைத்தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, குழந்தைகள் துறை தலைவர் சுரேஷ்கண்ணன், பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர் கண்ணன் ஆகியோர் உயிருடன் இருக்கும் மற்றொரு குழந்தையை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற முயற்சியுடன் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்தனர். 80 நாட்களுக்கும் மேலாக தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் இருந்த பெண் குழந்தை 525 கிராமிலிருந்து, தற்போது ஒரு கிலோவுக்கு மேல் எடை அதிகமாகி ஆரோக்கியமாக உள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததனர்.  இந்த குழந்தையை நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது: நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் குறை மாதத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகின்றது. 525 கிராம் மட்டுமே பிறப்பு எடைகொண்ட குழந்தையைக் காப்பாற்றுவது நாமக்கல் அரசு மருத்துவமனை வரலாற்றில் இதுவே முதல் முறை. தற்போது இந்த குழந்தை 1,400 கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. 34 வாரங்களிலேயே பிறக்க கூடிய குழந்தைகளுக்குதான் எஸ்.என்.சி.யு கேர் பிரிவில் சிகிச்சை தேவைப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் கூறும் தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துகளையும் எடுத்துக்கொள்ளாத தாய்மார்களுக்குத்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே மருத்துவர்களின் அறிவுரையை தாய்மார்கள் பின்பற்றவேண்டும் என்றார்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்