‘‘நான் ரெடி, நீங்க ரெடியா?’’: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயம்: கோவையில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சி பரமேஸ்வரன்பாளையம் கொங்கு திருப்பதி கோயில் மைதானத்தில் ‘மக்கள் கிராம சபை’ கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் பேச துவங்கிய மு.க.ஸ்டாலின், ‘‘நான் ரெடி, நீங்க ரெடியா?’’ எனக்கேட்டார். உடனே அங்கு திரண்டிருந்த மக்கள், உற்சாகம் அடைந்து, ‘‘நாங்களும் ரெடி…’’ எனக் கூறினர். இதன்பின்னர், மு.க.ஸ்டாலின்  பேசியதாவது: இன்னும் நான்கு மாதம்தான் இந்த ஆட்சி நடக்க இருக்கிறது. அதற்குள் எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு கொள்ளையடிக்கிறார்கள்.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அராஜகம் கோவை மாவட்டத்தில் நடக்கிறது. இதற்கு உங்கள் ஊர் அமைச்சர்தான் காரணம். நான் வகித்த உள்ளாட்சி துறை பதவியைத்தான் அவரும் வகித்து வருகிறார். உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தேன் நான். ஆனால், இப்போதுள்ள உள்ளாட்சி துறை செயல்பாடு குறித்து வெட்கப்படுகிறேன். அந்த அளவுக்கு கேவலப்படுத்தியுள்ளனர். உள்ளாட்சி துறை, ஊழல்ஆட்சி துறையாக மாறிவிட்டது.குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, பட்டா, ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்டம் என மக்களின் அடிப்படை பிரச்னை பற்றி விவாதித்து தீர்வுகாண, ஆண்டுக்கு மூன்று முறை கிராம சபை கூட்டம், உள்ளாட்சி துறை மூலம் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை. அதனால்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, நாம், ஊராட்சி தோறும், கிராம சபை கூட்டம் நடத்தினோம். அதன் எதிரொலியாக, தமிழகம்-புதுவையில் 40ல் 39 தொகுதியில் வெற்றி பெற்றோம்.மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் ஆற்றல் அதிமுக மந்திரிகளிடம் இல்லை. உள்ளாட்சி துறையில் எல்இடி தெருவிளக்கு மாற்றியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஒரு பல்பு விலை 450 ரூபாய். ஆனால், 3,737 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். இது, முதல் ஆண்டு ரேட். அடுத்த ஆண்டு 4,150 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு எழுதியுள்ளனர். இதில், இன்னொரு வகை விளக்கு உள்ளது. அதன் விலை ரூ.1,550. ஆனால், இதை 14,919 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். இப்படி எந்த பொருள் வாங்கினாலும் ஊழல். அதனால்தான், முதல்வர், துணை முதல்வர் மற்றும் எல்லா அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தமிழக கவர்னரிடம் வழங்கியுள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்வோம். இல்லையேல், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்போம்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது உறவினர்களுக்கு அரசு பணிக்கான காண்ட்ராக்ட் கொடுத்து பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். இதை, ஆதாரத்துடன் நீதிமன்றதில் சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தோம். சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, இதில் உண்மை உள்ளது எனக்கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தை நாடி, இடைக்கால தடை வாங்கி வந்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சும்மா விட மாட்டோம். ஊழல்வாதிகளை நிச்சயம் சிறையில் அடைப்போம்.அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை மு.க.ஸ்டாலின் நிரூபித்தால், நான் அரசியலில் இருந்து விலகத்தயார் என இத்தொகுதியை சேர்ந்த அமைச்சர் வேலுமணி சவால் விட்டுள்ளார். அவரது சவாலை நான் ஏற்கிறேன். நான், நிரூபித்து காட்டுகிறேன். இன்னும் நான்கு மாதம் மட்டும் பொறுத்திருங்கள். நீங்கள் அரசியலில் இருந்து விலகினால் மட்டும் போதாது, சட்டத்தின் முன் நிற்கவைத்து, உங்களுக்கு தண்டனை வாங்கித்தரும் வேலையை இந்த மு.க.ஸ்டாலின் செய்வார். இங்கு பெண்கள் அதிகளவில் திரண்டு உள்ளீர்கள். அதுவும் அமைதியாக இருக்கிறீர்கள். இதை பார்க்கும்போது நிச்சயம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி தரப்போகிறீர்கள் என தெரிகிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.‘‘பலூன் உடைக்க மந்திரி வந்துவிடப் போகிறார்’’கோவை, கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் மேலும் பேசியதாவது: இன்று நடக்கும் இந்த கூட்டத்துக்கு போட்டியாக, அதிமுகவினர் நடிகையை வரவழைத்து இதே தொகுதியில், நாளை பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். பால் மனம் மாறாத மந்திரி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பேசுகிறாராம். அவர், பலூன் உடைப்பதில் கில்லாடி. அரசு விழாவுக்கு சென்ற அவர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில், ேதாரணத்தில் கட்டியிருந்த பலூனை ஒவ்வொன்றாக உடைத்தவர். எவ்வளவு கேவலம்? இதுவா மந்திரி வேலை? இங்கு அலங்கரித்து கட்டியுள்ள பலூன்களை கழக தொண்டர்கள் பத்திரமாக கழற்றி சென்றுவிடுங்கள். இல்லையேல், அவர், பலூன் உடைக்க வந்துவிடுவார்….

Related posts

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்