நான்குவழிச்சாலையில் இறக்கிவிடுவதால் விபத்து அபாயம் பஸ்கள் ஊருக்குள் வந்துசெல்ல வேண்டும்-மக்கள் கோரிக்கை

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட தலைநகராக இருந்தும் வெளியூர் சென்று வர மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் மட்டும் விருதுநகர் மீனாம்பிகை பஸ் நிறுத்தம் வழியாக வந்து செல்லும். குறிப்பிட்ட நேரத்தில் சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் பஸ்களில் கூட்டம் இருந்தால் மதுரை செல்வதில் சிக்கல் தான்.கோவில்பட்டி, நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் ஊருக்குள் வராமல் பைபாஸ் ரோட்டில் செல்வதால், கலெக்டர் அலுவலகம் அல்லது நான்குவழிச்சாலை அரசு போக்குவரத்து பணிமனை முன் சென்று பஸ்களில் ஏறி மதுரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதே போல் மதுரையில் இருந்து விருதுநகர் வரவேண்டுமென்றாலும் சிவகாசி பஸ்கள் தவிர்த்து பிற பஸ்களில் ஏறினால், அரசு போக்குவரத்து பணிமனை அல்லது கலெக்டர் அலுவலகத்தில் இறங்கி ஊருக்குள் வரவேண்டிய நிலை உள்ளது.விருதுநகர் மக்கள் கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் செல்வதற்கும் கலெக்டர் அலுவலகம் சென்று ஏறி, இறங்கி வர வேண்டிய அவல நிலை பல ஆண்டுகள் தொடர்கிறது. அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக நான்குவழிச்சாலையை கடந்து வரும் போது ஏற்பட்ட விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். இரவு நேரங்களில் பஸ்களில் ஏறி, இறங்க மின்விளக்கு வசதியில்லை. நான்குவழிச்சாலையில் ஏறுவதால் விபத்துகள் அதிகரித்ததை தொடர்ந்து நான்கு வழிச்சாலை ஆணையம் சாலையை கடக்க முடியாத அளவிற்கு முழுமையாக தடுப்புகள் அமைத்து தடுத்து விட்டனர்.தடுப்புகள் போட்ட பிறகும் நான்குவழிச்சாலையில் செல்லும் அரசு பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றன. இதனால் பயணிகள் தடுப்புகள் கீழே குனிந்தும், மேலே ஏறியும் ஆபத்தான வகையில் கடந்து நான்குவழிச்சாலையில் நின்று பஸ்களில் ஏறி, இறங்குகின்றனர்.நான்குவழிச்சாலையில் உள்ள தடுப்புகளை கடந்து பஸ்களில் ஏறி, இறங்குவதால் தொடர்விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதை அறிந்தும் மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதை தடை செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அனைத்து பஸ்களும் நகருக்குள் அல்லது புதிய பஸ் நிலையம் வந்து செல்ல உரிய உத்தரவுகளை பிறப்பிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. பகல், இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற வகையில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக பயணிகளை ஏற்றி, இறக்கும் பஸ்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தான நடைமுறைகளை தடுக்கும் வகையில் அரசு போக்குவரத்து பணிமனையின் இருபுறமும் பஸ்களை ஏற்றி இறக்குவதை தடை செய்ய வேண்டும். புதிய பஸ் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர அல்லது அனைத்து பஸ்களும் நகருக்குள் வந்து செல்லும் வகையில் விரைவான உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும் என நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்….

Related posts

இலவச சட்ட உதவி மையம் முன் தீக்குளிக்க முயற்சி..!!

சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது: மாமதுரை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

டாக்டர், ராணுவ அதிகாரியிடம் மோசடி..!!