நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த என் தாயை அப்படி பேசியிருக்கக் கூடாது: பிரியங்கா காந்தி வேதனை

ரேபரேலி: ராகுல் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மோசமான கருத்து குறித்து பதிலளித்த பிரியங்கா காந்தி, ‘என் தாய் நாட்டிற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவரைப் பற்றி பாஜ அப்படி பேசியிருக்கக் கூடாது,’ என வேதனை தெரிவித்தார்.உத்தரகாண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக நமது ராணுவ வீரர்கள் கூறினால் அதுவே இறுதியானது. ராணுவ வீரர்களை நீங்கள் நம்பவில்லையா? நீங்கள் உண்மையிலேயே ராஜிவ் காந்தியின் மகனா என்று நாங்கள் கேட்டிருக்கிறோமா?’ என ராகுல் காந்தியை குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:என் தாயைப் பற்றி அப்படி பேசியிருக்கக் கூடாது. அவர் தியாகியின் மனைவி. நாட்டிற்காக கணவனை இழந்த விதவை. நாட்டிற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். எனது தந்தை படுகொலை செய்யப்பட்டு, அவரது சிதைக்கப்பட்ட உடல் வீட்டுக்கு கொண்டு வந்ததை பார்த்தவர். அவரைப் பற்றி இப்படி பேச வேண்டிய அவசியம் என்ன? ஏன் இந்த அசிங்கத்தில் என் தாயை இழுத்தார்கள்?மதிப்புகள், சித்தாந்தங்கள், பிரச்னைகள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற அற்ப விஷயங்களை மற்றவர்களை இழிவுபடுத்தக் கூடாது. தவறான நிர்வாகம், வளர்ச்சியின்மை ஆகியவற்றில் இருந்து தப்பிக்க, மக்களை பிளவுபடுத்தும் செயல்களில் தீவிரமாக ஈடுபடுத்தி பாஜ மக்களை தவறாக வழிநடத்துகிறது. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் பிரச்னை, பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் – இவைதான் உண்மையான பிரச்னைகள்.  மக்களைத் தூண்டிவிடவும், மதம் மற்றும் சாதி அடிப்படையில் பிளவுபடுத்தவும், வேண்டுமென்றே மக்களை நிதி நெருக்கடியிலும், வேலையின்மையிலும் பாஜ வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

சட்டீஸ்கரில் நக்சல் கண்ணி வெடியில் சிக்கி 5 போலீசார் காயம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம்