நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உ.பி.யில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் பாஜ ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகிறது. பாஜவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் இக்கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை இம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற பாஜ, இந்த முறை 234 இடங்களை மட்டுமே பிடிக்கும் என பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதே சமயம் இந்தமுறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் சமாஜ்வாடி கட்சியும் களத்தில் இருக்கிறது. இதன் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் பிரசாரம் செய்து வருகிறார். மற்றொரு புறம் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். முக்கிய கட்சிகள் அனைத்தும் பெரிய அளவில் கூட்டணி அமைக்காமல் தனித்து களம் காண்பதால் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாநிலத்தில் முதல் கட்டமாக மேற்கு பகுதியில் உள்ள ஷாம்லி, ஹப்பூர், கவுதம் புத்தா நகர், முசாபர்நகர், மீரட், பக்பத், காசியாபாத், புலந்த்சர், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மத்திய அமைச்சர்கள். 25 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள். 40 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். 2 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 25 ஆயிரத்து 849 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் எதிர்காலத்தை 2.27 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்கிறார்கள். முதல்கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் 53 தொகுதிகள் பாஜ வசம் உள்ளவை. தலா 2 தொகுதிகள், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வசம் உள்ளவை. ஒரு தொகுதி, ராஷ்டிரீய லோக்தளம் வெற்றி பெற்ற இடமாகும். வாக்குப்பதிவு தொடங்கியதும் கடுங்குளிரிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். உ.பி. அமைச்சர் அதுல் கார்க் காசியாபாத் கவி நகர் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு 412 கம்பெனிகளை சேர்ந்த 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் மற்றும் மாநில போலீசாரும் பாதுகாப்புக்காக ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் அமைதியான முறையில் வாக்களிக்க மாநில எல்லைகளை போலீசார் சீல் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலை 9.30 மணி நிலவரப்படி 7.95 சதவீத வாக்குகள் பதிவாகின….

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்