நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

ராஜபாளையம், ஜூலை 7: ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது முதுகுடி ஊராட்சி. இந்த பகுதியில் நாட்டாண்மையாக இருந்த கருப்பையா என்பவர் பெயரில் இரண்டு வருடங்களுக்கு முன் அங்குள்ள முதுகுடி கண்மாய் மீன் பசலி ஏலம் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ராஜன் என்பவர் ஊர் நாட்டாண்மையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னரும் கருப்பையா முதுகுடி கண்மாயில் தொடர்ந்து மீன்பிடித்து வந்துள்ளார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கருப்பையா கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று கருப்பையா பெயரில் இருந்த மீன் பசலி ஏலத்தை முதுகுடி பொதுமக்கள் பெயரில் மாற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரவு தற்போதைய நாட்டாண்மை ராஜன் மற்றும் சிலர் கண்மாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த முன்னாள் நாட்டாண்மை கருப்பையா மற்றும் சிலர் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அங்கிருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில், நள்ளிரவு முதுகுடி மக்கள் சங்கரன்கோயில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜபாளையம் – நெல்லை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நடந்த மறியல் போராட்டத்திற்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை