நாடு முழுவதும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.106 அதிகரிப்பு: சென்னையில் ரூ.2,146 ஆனது

சேலம்: நாடு முழுவதும் இம் மாதத்திற்கான வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.106 அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.2,146 ஆகவும், சேலத்தில் ரூ.2,103.50 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் நடைமுறை உள்ளது. காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது.இந்நிலையில், இம் மாதத்திற்கான (மார்ச்) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், சென்னையில் ரூ.915.50க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாத விலையில் இருந்து ரூ.106 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ.2,040க்கு விற்கப்பட்ட வர்த்தக காஸ் சிலிண்டர், ரூ.2146 ஆகவும், சேலத்தில் ரூ.1,997.50க்கு விற்கப்பட்ட காஸ் சிலிண்டர் இம்மாதம் ரூ.2,103.50 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேபோல், டெல்லியில் ரூ.2,013 ஆகவும், மும்பையில் ரூ.1,963 ஆகவும், கொல்கத்தாவில் 2,093 ஆகவும் வர்த்தக சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரஷ்யா- உக்ரைன் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலின் காரணமாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையை அதிகரிக்காமல், ஒரே நிலையில் ஒன்றிய அரசு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் மாதத்தில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை