நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்: தமிழகத்தில் 59 மையங்களில் நடக்கிறது

சென்னை: நாடு முழுவதும் இருந்து 18.72 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு இன்று நடக்கிறது. தமிழகம் முழுவதும் 59 மையங்களில் நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2022-23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் 497 நகரங்களில் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை 12ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டில் தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவுரைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு மையத்துக்குள் காலை 11.40 மணியில் இருந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் 50 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் 45 வினாக்களுக்கு, அதாவது 180 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்ணுக்கு இந்த தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஏ பிரிவில் 35 வினாக்களும், பி பிரிவில் 15 வினாக்களும் கேட்கப்பட உள்ளன. அதில் பி பிரிவு வினாக்களில் கேட்கப்படும் 15 வினாக்களில் 10 வினாக்களுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். இதுதவிர தவறாக பதில் அளித்தால், ஒரு ‘நெகட்டிவ்’ மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 59 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. சென்னையை பொறுத்தவரை 30க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் சுமார் 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுதுகிறார்கள்.* தேர்வு மையத்திலேயே முகக்கவசம்நீட் தேர்வுக்கு வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே  தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில், 50 மி.லி. சானிடைசர் பாட்டில் கொண்டு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹால்டிக்கெட்டை அதில் கேட்கப்பட்டு இருக்கும் விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி தவறினால், விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது கொரோனா நோய்த் தொற்று இருப்பதால், தேர்வர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே தேர்வு  மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தேர்வு மையத்திலேயே  தேர்வர்களுக்கு என்.95 முகக்கவசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விட அதிகமாக இருந்தால், அந்த தேர்வர் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அனைத்து அறிவுரைகள், வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்