நாகர்கோவில் வாத்தியார்விளையில் ஜெபக்கூடம் கட்டுவதற்கு எதிர்ப்பு போலீஸ் குவிப்பு

நாகர்கோவில், ஜூன் 9: நாகர்கோவில் வடசேரி வாத்தியார்விளையில் ஜெபக்கூடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் குவிக்கப்பட்டது. நாகர்கோவில் வாத்தியார்விளை கிரவுன்தெருவில் கடந்த 2020ம் ஆண்டு ஜெபக்கூடம் கட்டும் பணி தொடங்கியது. இதற்கு வாத்தியார்விளை ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கலெக்டர், எஸ்பி, ஆர்டிஓ ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். நாகர்கோவில் ஆர்டிஓ தலைமையில் இரு தரப்புகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், வேணுகோபால் கமிஷன் நடைமுறையில் இருப்பதால் புதிதாக ஆலயங்கள் கட்ட அனுமதி இல்லை. எனவே கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என ஆர்டிஓ உத்தரவிட்டார்.

அதையடுத்து ஜெபக்கூடம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெபக்கூடம் கட்டுமான பணிக்காக ஜல்லி, மணல் போன்ற கட்டுமான உபகரணங்கள் கொண்டுவரப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மிசா சோமன், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், பாஜக மண்டல பொறுப்பாளர் ராஜேஷ், ஐயப்பா சேவா சமாஜ மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா உள்பட பலர் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் விரைந்தனர். இதனை தொடர்ந்து இருதரப்பினர்களுக்கு இடையே மீண்டும் ஆர்டிஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில், ஆலயம் கட்ட அனுமதி மறுக்கபட்டும், கட்டுமான பணிகளை மேற்கொள்ள வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஒரு தரப்பினர் கட்டுமான பணியை மேற்கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர். ஜெபக்கூடம் கட்டுமானப்பணியை தொடங்ககூடாது என ஆர்டிஓ உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் வாத்தியார்விளையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை