நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ₹659.32 கோடி கடன் வழங்க இலக்கு

நாகப்பட்டினம்,ஜூலை5: கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு டிஆர்ஓ பேபி தலைமை வகித்தார். 188 பயனாளிகளுக்கு ₹1 கோடியே 2 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் கடன்களுக்கான காசோலைகளை டிஆர்ஓ வழங்கினார்.

இதை தொடர்ந்து அவர் பேசியதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 57, பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் 13, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் 2, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் 1, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கம் 1, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 1, மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் 1, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 1, குத்தகைதாரர் கூட்டுறவு பண்ணை சங்கம் 1 என மொத்தம் 78 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் நிகர இலாபம் மற்றும் நடப்பாண்டு லாபத்தில் 66 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை 10 ஆகும்.

கடந்த ஆண்டு மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 42 நபர்களுக்கு அளிக்கப்பட்ட மொத்த கடன் தொகை ₹467.7 கோடி ஆகும். நடப்பு (2024 -25ம்) ஆண்டிற்கான நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான கடன் இலக்கு ₹659.32 கோடி ஆகும். பயிர்கடன் ₹200 கோடி, கால்நடைபராமரிப்பு கடன் ₹10 கோடி, மீன்வள கடன் ₹10 கோடி, சுயஉதவிக்குழு கடன் ₹65 கோடி, நகைக்கடன் ₹224.65 கோடி ஆகும். பயிர்கடன் (Scale of Finance ) படி முழு அளவு வழங்க வேண்டும். கறவை மாடு வாங்க ஒவ்வொரு சங்கமும் விஜி MT (Agri) கடன் அளிக்க வேண்டும்.

அரசு திட்ட கடன்களான TAMCO, TABCEDCO, THADCO, NHFDC, Destitute Widow போன்றவை இலக்கு நிர்ணயித்த அளவு வழங்க வேண்டும். சங்கத்தில் உள்ள வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு விட வேண்டும். கொள்முதல் செய்யாத அனைத்து சங்கங்களும் வேளாண் எந்திரங்களை கொள்முதல் செய்து வாடகைக்கு விடவேண்டும். உர இருப்பு எப்பொழுதும் சங்கத்தில் வைக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கணினிமயமாக்கல் விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும். நியாயவிலைக்கடைகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். நியாயவிலைக்கடைகள் உரிய நேரத்தில் திறப்பதை செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வெளி ஆட்கள் நியாயவிலைக்கடைகளில் பணிபுரியக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் பொருட்கள் தரம், எடைத்தராசின் தரம் அவ்வப்பொழுது ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சரவணன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் செயலாட்சி முத்துகுமார், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) பால்ஜோசப், சரக துணை பதிவாளர் காவியாநல்லமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை