நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம்

நாகப்பட்டினம்,ஜூலை 4: நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற பயனாளிகள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய கோழிகள் இலவசமாக வழங்கப்படும். நாட்டுக் கோழிப்பண்ணை நிறுவ தேவையான கோழிக்கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் (₹3 லட்சத்து 13 ஆயிரத்து 750) 50 சதவீதம் (₹1 லட்சத்து 56 ஆயிரத்து 875) மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.

திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீத (₹1 லட்சத்து 56 ஆயிரத்து 875) பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். பயனாளிகளிடம் கோழிக்கொட்டகை அமைக்க மின் இணைப்புடன் கூடிய 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளிகள் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 பயனாளிகள் முதல் 6 பயனாளிகள் வரை தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தொழில்முனைவோர் அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை