நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, அக்.4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நவராத்திரி விழாவின் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்று அலங்கார ரூபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
பிரசித்தி பெற்ற சிவாலயமான அண்ணாமலையார் கோயில், உமையாளுக்கு இடபாகம் அருளிய திருத்தலம் எனும் சிறப்பை பெற்றது. எனவே, ஆண்டுேதாறும் இங்கு நடைபெறும் நவராத்திரி விழா முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்படி, பிரசித்தி பெற்ற நவராத்திரி விழா நேற்று விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான நேற்று இரவு 8 மணி அளவில், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வான வேடிக்கைகள் முழங்க புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, மாட வீதியில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் 2ம் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், நாளை கெஜலட்சுமி அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலிக்கிறார். அதைத்தொடர்ந்து, 4ம் நாளன்று மனோன்மணி அலங்காரத்திலும், 5ம் நாளன்று ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும், 6ம் நாளன்று ஆண்டாள் அலங்காரத்திலும், 7ம் நாளன்று சரஸ்வதி அலங்காரத்திலும், 8ம் நாளன்று லிங்கபூஜை அலங்காரத்திலும், 9ம் நாள் விழாவில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருள்வார். விழாவின் நிறைவாக, வரும் 11ம் தேதி விஜயதசமியன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு