நம்ம ஸ்கூல் திட்டத்தில் 3.69 லட்சம் முன்னாள் மாணவர்கள் இணைந்தனர் 15 ஆயிரம் பேர் நன்கொடை வழங்க விருப்பம் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்த

வேலூர், அக்.13: மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் திட்டத்தில் 3.69 லட்சம் முன்னாள் மாணவர்கள் இணைந்துள்ளனர். மேலம் 15 ஆயிரம் பேர் நன்கொடை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளியாக உயர்த்துவதற்காக நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற அமைப்பு தமிழக அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளை மேம்படுத்த பழைய மாணவர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் என சமூக அக்கறை கொண்ட முன்னாள் மாணவர்கள் ஆகியோரை இணைத்து அவர்கள் மூலம் சமூக பொறுப்புணர்வு நிதி என்னும் சி.எஸ்.ஆர். நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நபர்கள் தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள் அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு அனுமதித்துள்ளது. அதில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், சுண்ணாம்பு அடித்தல், கம்ப்யூட்டர்கள் வாங்கி கொடுப்பது, விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, பெஞ்ச், டெஸ்க், ஆய்வகங்கள் உருவாக்குதல், நூலகங்கள் ஏற்படுத்துதல், கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்க முடியும். இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் இணைய தளத்தில் இணைந்து பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கலாம்.
இதுதொடர்பான தங்களது விருப்பங்களை தெரிவிக்கலாம். இதில் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடை கூட வெளிப்படைத்தன்மையுடன் பள்ளி வளர்ச்சிக்காக செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் அதற்கான பணிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதன்படி 5 லட்சம் முன்னாள் மாணவர்கள் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளியின் மீது பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட முன்னாள் மாணவர்களை கண்டறிய செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தது. அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் 5 லட்சத்து 60,056 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியுடன் இணைந்து பயணிக்க பதிவு செய்தனர். அதில் 3 லட்சத்து 68,390 பேர் அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளனர். மேலும் 15,562 பேர் நன்கொடை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். பதிவு செய்துள்ள முன்னாள் மாணவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வழங்கி உள்ளார்கள். நன்கொடையாளராக பதிவு செய்த முன்னாள் மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு அவர்களின் விருப்பம் அறிய வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் தேவைகளை கலந்தாலோசித்து நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதள பக்கத்தில் இந்நிதியின் வாயிலாக நிறைவேற்றப்படும். அப்பள்ளியின் தேவைகளை பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

கே.ஜி.கண்டிகை வாரசந்தை மைதானத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் ரத்து