நம்மை 200 ஆண்டுகள் ஆண்ட இங்கிலாந்துக்கு பிரதமராகிறார் ரிஷி சுனக்: பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து

லண்டன்: இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக கடந்த சில வாரங்களுக்கு முன்பு லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரது பொருளாதார கொள்கைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. தொடர் நெருக்கடி காரணமாக தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன. ஆளும் கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சியின் எம்பி ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கான களத்தில் இறங்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் ரிஷி சுனக்கிற்கு 128 எம்பிக்களின் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் பிரிட்டன் பிரதமராவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்கும் உங்களுடன் உலகளாவிய சிக்கல்கள் மற்றும் 2030ம் ஆண்டை நோக்கிய இலக்கை அடைய இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன். இரு நாடுகளுக்கிடையேயான வரலாற்று ரீதியிலான உறவை மீட்கும் பாலமாக இருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்‘ என்று தெரிவித்துள்ளார்.*வரலாறு மாறியதுஇந்தியாவை கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இங்கிலாந்து (ஆங்கிலேயர்கள்) ஆண்ட நிலையில், அவர்கள் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி, தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்து இன்று 75 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் வரலாறு மாறியுள்ளது. இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாகி இருப்பது முக்கிய அரசியல் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. * மாமனார் வாழ்த்துஇங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர், முதன்முறையாக இந்த பதவியை அலங்கரிக்கிறார். ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இதேபோன்று, இன்போசிஸ் நிறுவனர் மற்றும் ரிஷி சுனக்கின் மாமனாரான என்.ஆர்.நாராயண மூர்த்தி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘ரிஷிக்கு வாழ்த்துகள். அவரால் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் வெற்றியடைய வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு தன்னாலான சிறந்த விஷயங்களை அவர் செய்வார் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்து உள்ளார்.* பஞ்சாப் ‘வித்’ கர்நாடகாஇந்தியாவை ஆண்ட இங்கிலாந்து  நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்பது,  இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் இந்த நிலையை  தொட்டது மிக சாதாரண விஷயமல்ல. கடந்த 1980ம் ஆண்டு மே 12ம் தேதி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரத்தில், பஞ்சாப் குடும்பத்தை சேர்ந்த தம்பதி யாஷ்விர் – உஷா சுனக் ஆகியோருக்கு ரிஷி சுனக் பிறந்தார். உலக புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மேலாண்மை கல்வியை பயின்றார். 2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றிய ரிஷி சுனக், கர்நாடகாவை சேர்ந்த இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் நிறுவனம் ஒன்றில் 2013 முதல் 2015ம் ஆண்டு வரை பணியாற்றினார். தொடர்ந்து அவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக ரிச்மாண்ட் தொகுதியில் களமிறங்கிய இவர், அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிப் பெற்றார். கடந்த 2018ம் ஆண்டு அமைச்சராகவும், 2019ல் கருவூலத்தின் தலைமை செயலாளராகவும், 2020ல் நிதியமைச்சராகவும் பதவி வகித்தார். தற்போது இங்கிலாந்தின் பிரதமர் என்ற இலக்கை எட்டியுள்ளார்….

Related posts

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை