நம்மால் முடியும்

நமது திறமைகளை பொருளாதார ரீதியாக மாற்ற வேண்டிய கட்டாயம் இப்போது உள்ளது. அப்போது தான் வளர்ச்சி என்ற இலக்கை அடைய முடியும். இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம். குறிப்பாக, உலக பொம்மை சந்தையின் மதிப்பு ரூ.7.4 லட்சம் கோடியாக உள்ளது. பொம்மைகள் மூலம் பல லட்சம் கோடிகளை சம்பாதித்து வருகின்றனர். இந்தியாவின் பங்களிப்பு ரூ.11,100 கோடி மட்டுமே. இந்தியா 80% பொம்மைகளை இறக்குமதி செய்கிறது.பொம்மைகள் மட்டுமல்ல, ஆன்-லைன் பொழுதுபோக்குகளிலும் இந்தியாவின் பங்களிப்பு பெரிதாக இல்லை. பொம்மை, ஆன்-லைன் பொழுதுபோக்குகள் மூலம் ஒரு நாடு பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆன்-லைன் விளையாட்டுகள் மன இறுக்கம், கோபம் மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. இதனால் இளைய சமுதாயம் தவறான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. பணத்துக்காக மட்டும் ஆன்-லைன் பொழுதுபோக்குகளை அந்நாடுகள் உருவாக்கவில்லை. போட்டி நாட்டின் இளைய சமுதாயத்தை தவறான பாதையில் அழைத்து செல்லும் கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி சிறப்பும், பாரம்பரிய விளையாட்டுகளும் உள்ளன. இவற்றை ஏன் ஆன்-லைன் பொழுதுபோக்கு அம்சங்களாக தொழில்நுட்ப உருமாற்றம் செய்யக்கூடாது. ஆன்-லைன் கேமில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விளையாட்டுகளை கையாளும் வகையில் நவீன தொழில்நுட்பம் மூலம் ‘‘ஆப்’’ ஒன்றை உருவாக்கவேண்டும். இதை முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும். தொடர்ந்து சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால், இது சாத்தியமாகும். இந்தியாவில் குழந்தைகளை கவரும் பொம்மை தயாரிப்பு, சிலை வடிக்கும் பணிகள் பெரும்பாலும் சாலையோரங்களிலும், குடிசை தொழில்களாவே இருந்து வருகிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும். பொம்மைகள் தயாரிப்பை அடுத்தகட்டத்துக்கு விரிவுபடுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்க வேண்டும். குறிப்பாக, பொம்மை தயாரிப்பு தொழில் துவங்க உடனடி கடன், சலுகைகளை அறிவிக்க வேண்டும். அப்போது தான் பொம்மைகள் தயாரிப்பில் உச்ச நிலையை அடைய முடியும். நம் முன்னோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுக்கு காப்புரிமை பெறுவதிலும், பிரபலப்படுத்துவதிலும் நாம் அக்கறை காட்டவில்லை. இனிமேல், இதுபோன்ற தவறுகள் தொடரக்கூடாது. அறிவியல் கண்டுபிடிப்பு, பாரம்பரிய விளையாட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு உள்ளிட்ட அனைத்திலும் நாம் தான் நம்பர் 1 இடத்தில் இருந்திருக்க வேண்டும். நவீன மயம், வியாபார நோக்கம் உள்ளிட்ட காரணங்களால் இவற்றை இழந்து விட்டோம். பொம்மை தயாரிப்பில் மட்டுமல்ல, அனைத்திலும் நம்மால் சாதிக்க முடியும். கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், சாதனைகளை பிரபலப்படுத்தவும் வேண்டிய பொறுப்பு நமது ஒன்றிய அரசுக்கு உள்ளது….

Related posts

‘மூன்றில் ஒரு பங்கு’

பாஜ அரசின் அவலம்

அனல்பறந்த விவாதம்