நம்பர் ஒன் டோல்கேட் திருச்சி -சேலம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்

 

சமயபுரம், ஜூலை 21: நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் மேம்பாலம் அருகே திருச்சி -சேலம் நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து கடந்து செல்கின்றது. சமயபுரம் டோல்கேட் வழியாக துறையூர், சேலம் , ஈரோடு, பெங்களூர், சென்னை, அரியலூர் ஆகிய பகுதியிலிருந்து அரசு, தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்கிறது. இந்நிலையில் கொள்ளிடம் மேம்பாலத்தின் அருகே டோல்கேட் பகுதி மக்களுக்காக மயானம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் திருச்சி -சேலம் நெடுஞ்சாலையில் இருந்து அதிவேகமாக வரும் பேருந்து, கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுகிறது. மேலும் அப்பிரிவு சாலை பகுதியில் போதிய மின்விளக்கு இல்லாததால் வெளிச்சமின்றி காணப்படுகிறது. இதனால் கொள்ளிடம் மேம்பாலத்தின் அருகே உள்ள திருச்சி சேலம், லால்குடி திருச்சி செல்லும் இரு நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள பிரிவு சாலையை கடக்க நினைக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரு நெடுஞ்சாலை பிரிவு பகுதியில் தொடரும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு

செப்.11ல் மக்கள் தொடர்பு முகாம்