நத்தம் அருகே சிறுகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா களைகட்டியது: வலையில் ஜிலேபி, கட்லா ஏராளமான மீன்கள் சிக்கின

 

நத்தம், செப். 11: நத்தம் அருகே சிறுகுடி கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதில், விரால், கட்லா மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி கண்மாய் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் மழை பெய்ய வேண்டியும், இயற்கை வளம் செழித்து, நன்மை கிடைக்க வேண்டியும் ஆண்டுதோறும் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கண்மாயில் மீன்பிடி திருவிழா (10ம் தேதி) நடத்துவது என ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று அதிகாலையிலேயே சிறுகுடி கண்மாய்க்கு சிறுகுடி, ஒடுகம்பட்டி, பூசாரிபட்டி, நல்லகண்டம், மஞ்சநாயக்கன்பட்டி, அனைமலைப்பட்டி, நத்தம், சிங்கம்புணரி, வெள்ளிமலை, துவரங்குறிச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் மீன்பிடி வலையுடன் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். முன்னதாக கிராமத்தின் சார்பில் அம்மன் வழிபாடு நடந்ததை தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதித்தனர்.

இதைதொடர்ந்து கிராம மக்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர். வலையில் ஜிலேபி, கட்லா, கெளுத்தி, விரால் போன்ற பல்வேறு வகை மீன்கள் கிடைத்ததையடுத்து அவற்றை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அவற்றில் சிலவற்றை உறவினர்களுக்கும் கொடுத்து, தாங்களும் தங்கள் வீடுகளில் சமைத்து ருசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள், ஊர் காரணக்காரர்கள் மற்றும் ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் செய்திருந்தனர்.

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ மின்னொளி பெயர்ப்பலகை பழுது: சீரமைக்க கோரிக்கை

மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்