நதிகள், நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தலைமை செயலாளர் அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘விழுப்புரம் மாவட்டம், நரையூர் கிராமத்தில் ஓடும் பாசன கால்வாயில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கழிவுநீரை வெளியேற்றுவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ரமேஷ் மணி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள், இந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தேவைப்பட்டால் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் நதிகள் மற்றும் கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தடுக்கவும், தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்த வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கையை தலைமை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், கொரோனா 2வது அலை காரணமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து அறிக்கை பெற முடியவில்லை. எனவே, அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நதிகள், நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தலைமை செயலாளர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி