நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் சென்னை ஆற்றங்கரைகளில் 64 ஆயிரம் மரக்கன்றுகள்: மாநகராட்சி தகவல்

சென்னை: நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் சென்னை ஆற்றங்கரைகளில் 64,663 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு, கூவம் போன்ற ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை சமப்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்புவேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் திரு.வி.க. நகர் பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ் பாலம் வரை ரூ.5.4 கோடி மதிப்பிலும், எம்.ஆர்.டி.எஸ் பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ரூ.5.8 கோடி மதிப்பிலும் நடைபாதை அமைத்தல், மரங்கள் நடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 3.9 கி.மீ. நீளத்தில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, வலதுபுறத்தில் 4 கி.மீ. நீளத்தில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் 4 பகுதிகளில் கரைகளை சமப்படுத்தி, பாரம்பரிய மரக்கன்றுகளான அரச மரம், ஆலமரம், மகிழம், மலைவேம்பு, அசோகமரம், பூவரசு, புங்கன், கல்யாண முருங்கை, மருத மரம், புன்னை, வேம்பு, இலுப்பை, கொய்யா, நொச்சி உள்பட 43 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு தற்சமயம் கரைகளை சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.மேலும், காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை 2.12 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை 2.1 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 14,300 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தாய் மூகாம்பிகை பல் மருத்துவமனை கல்லூரி வளாகம் முதல் பாடிக்குப்பம் மயானபூமி வரை 1.3 கி.மீ. நீளத்திற்கு ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் 14,050 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரயில் நகர் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை 5.7 கி.மீ. நீளத்திற்கு ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் 21,313 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்