நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலுக்கு முழுக்கு

சென்னை: இனி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்றத்தையும் கலைத்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். மாவட்டம்தோறும் மன்றத்துக்கு நிர்வாகிகளை நியமித்தார். சட்டசபை தேர்தலுக்கான பணிகளையும் முடுக்கிவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி ரஜினி கூறும்போது, தனது உடல் நிலை சரியில்லை என்றும் கொரோனா அலையில் தன்னால் வெளியில் வந்து மக்களை சந்திப்பது சந்தேகம் என்றும் கூறினார். ஆனாலும் அரசியலில் இருந்து விலகுவதாக அப்போது அவர் தெரிவிக்கவில்லை.இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்தபோது, அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அங்கு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். குணமாகி சென்னை வந்ததும், ரசிகர்களை மீண்டும் அவர் சந்தித்தார். அப்போது தனது உடல் நிலையை காரண மாக கூறி, அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அவர் அறிவித்தார். பிறகு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளில் அவர் பங்கேற்றார். மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் ஆண்டுதோறும் அமெரிக்கா செல்வார். அதுபோல் இம்முறையும் கடந்த மாதம் அவர் அமெரிக்கா சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் சென்னை திரும்பினார்.இந்நிலையில் நேற்று, ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த அவர் அழைப்பு விடுத்திருந்தார். சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை செய்தியாளர்களிடம் ரஜினி பேசும்போது, ‘நான் அரசியல் கட்சி தொடங்குவதில்லை என அறிவித்த பிறகு மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை. அதற்கான சூழலும் அமையவில்லை. அதனால் இப்போது சந்திக்கிறேன். மக்கள் மன்றத்தை தொடர்ந்து நடத்துவதா, அதன் செயல்பாடுகள் இனி எப்படி இருக்க வேண்டும் என ஆலோசனை நடத்த உள்ளேன். அத்துடன் நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறேன்’ என்றார்.கூட்டத்துக்கு பிறகு ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை: நான் அரசியலுக்கு வரமுடியவில்லை என சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன, நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. இதை விளக்க வேண்டியது எனது கடமை. அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். காலச்சூழ்நிலையில் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும். இவ்வாறு அறிக்கையில் ரஜினி காந்த் கூறியுள்ளார். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு முன்பே ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தனது பொறுப்பிலிருந்து விலகினார். இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் மக்கள் மன்ற தலைமைக்கு அனுப்பினார்.கூட்டத்தில் ரஜினி பேசியது என்ன?மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் வந்தார். பிறகு ‘கொரோனா தடுப்பூசி யார் யார் போட்டுள்ளீர்கள்’ என ரஜினி கேட்டார். தடுப்பூசி போடாதவர்களிடம் ‘தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்லது’ என அவர் கூறினார். பிறகு ‘அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் மன்றம் பற்றி பேசவே அழைத்திருக்கிறேன்’ என்றார். அப்போது சில நிர்வாகிகள், ‘இப்போதும் நேரம் இருக்கிறது. நீங்கள் அரசியலுக்கு வரலாமே’ என்றனர். ஆனால் பெரும்பாலான நிர்வாகிகள், ‘உங்கள் உடல் நலம்தான் எங்களுக்கு முக்கியம். உங்கள் முடிவுக்கு கட்டுப்படுகிறோம்’ என்றனர். அப்போது ரஜினிகாந்த், ‘எனக்கு வயது ஆகிவிட்டது. கொரோனா அலையும் நீங்கவில்லை. அடுத்தடுத்த அலைகள் வரும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். முன்பு சொன்னதுபோல், எனக்காக நான் பயப்படவில்லை. ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, முன்பு போல், ரசிகர் நற்பணி மன்றமாக தொடர்ந்து நடத்த யோசித்திருக்கிறேன்’ என்றார். இதையடுத்து, ‘உங்கள் முடிவை ஏற்கிறோம்’ என நிர்வாகிகள் அவரிடம் உறுதியளித்தனர். நற்பணி மன்றத்தை முன்புபோல் எப்படி நடத்துவது என நிர்வாகிகளுக்கு ரஜினி ஆலோசனை வழங்கினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை