Friday, June 28, 2024
Home » நடப்பாண்டு காரீப் பருவ நெற்பயிருக்கு விரைவில் காப்பீடு செய்து கொள்ளுங்கள்

நடப்பாண்டு காரீப் பருவ நெற்பயிருக்கு விரைவில் காப்பீடு செய்து கொள்ளுங்கள்

by Neethimaan

தஞ்சாவூர், ஜூன் 26: புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு காரீப் பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்திட விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் கோடை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூர்ற்கு ஷீமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யபட்டுள்ளது. தஞ்சாவூர் 1ல் தஞ்சாவூர் (பூதலூர் மற்றும் கண்டியூர் பிர்கா தவிர), ஒரத்தநாடு. திருவோணம், பட்டுக்கோட்டை மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவசத்திரம் மற்றும் அம்மாபேட்டை (அய்யம்பேட்டை மற்றும் பாபநாசம் பிர்கா தவிர) ஆகிய வட்டாரங்கள் இதில் அடங்கும். தஞ்சாவூர் 11ற்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் நிறுவனம் தேர்வு செய்யபட்டுள்ளது.

தஞ்சாவூர் 11ல் தஞ்சாவூர் வட்டாரத்தில் பூதலூர் பிர்காவில் உள்ள சித்திரக்குடி கூடுதல், சித்திரக்குடி முதன்மை, மருதாக்குடி, ராயந்தூர் கிராமங்கள் மற்றும் கண்டியூர் பிர்காவில் உள்ள அரசூர் சின்ன அவுசாகிப் தோட்டம், கலியபானு ராஜா தோட்டம், மனக்கரம்பை, நாகத்தி, ராஜேந்திரம். செங்களுநீர் தோட்டம் மற்றும் தென்பெரம்பூர் ஆகிய கிராமங்கள் இதில் அடங்கும். அம்மாபேட்டை வட்டாரத்தில் அய்யம்பேட்டை பிர்காவில் உள்ள அகரமாங்குடி, பெருமாக்க நல்லூர், பொரக்குடி, செருமாக்கநல்லூர், சுரைக்காயூர், வடக்கு மாங்குடி, வையச்சேரி, வேம்புகுடி ஆகிய கிராமங்களும், பாபநாசம் பிர்காவில் உள்ள தேவராயன்பேட்டை, மேலசெம்மங்குடி, பொன்மான் மேய்ந்தநல்லூர், புலிமங்கலம் மற்றும் திருவையாத்துக்குடி ஆகிய கிராமங்களும் மற்றும் பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களும் இதில் அடங்கும். 2024 ஆம் ஆண்டில் காரீப் சிறப்பு பருவத்தில் நெல்-I பயிருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 775 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெலுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.36,500 ஆகும்.

விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ.730 ஆகும். ஜூலை 31 காப்பீடு செய்ய கடைசி தேதி ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1434) வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்தபின் அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தாமதமின்றி உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் அனைவரும் பயனடையுமாறும், கடைசி நேர இன்னல்களை தவிர்த்திடுமாறும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

five − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi