நடப்பாண்டில் மூன்றாவது முறையாக ஏற்காட்டில் பாரா கிளைடிங் சாகச பயணம்: 45 நிமிடம் வானில் பறந்து அசத்திய இன்ஜினியர்

சேலம்: சேலம் ஏற்காடு மலையில் இருந்து இன்ஜினியர் ஒருவர், அடிவாரத்திற்கு 45 நிமிடங்களில் பாரா கிளைடிங் சாகச பயணம் செய்து கவனம் ஈர்த்துள்ளார். சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (27). வானில் பறக்க ஆசை கொண்ட இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இமாச்சல பிரதேசம் சென்று பாரா கிளைடிங் கற்றுக் கொண்டார். இதுவரை 100முறைக்கும் மேல் பாராகிளைடிங்கில் பறந்துள்ளார். சொந்த ஊரான ஏற்காட்டில் மலை இருப்பதால் அங்கிருந்து  பறக்க வேண்டும் என ஆசை கொண்டார். அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி ஏற்காடு லேடீஸ் சீட் பகுதியிலிருந்து பாரா கிளைடிங் மூலம் குரும்பப்பட்டி பகுதியில் மலை அடிவாரத்திற்கு தரையிறங்கினார். அப்போது, 2 முறை வானில் பறந்து அசத்தினர். இந்நிலையில், நேற்றும் ஏற்காடு லேடீஸ் சீட் பகுதியில் இருந்து அடிவாரத்திற்கு வானில் பறக்க முடிவு செய்தார். இதற்காக, சேலம் மாவட்ட காவல் துறை மற்றும் சேலம் விமான நிலையத்தில் முறையான அனுமதி பெற்றார். தொடர்ந்து, சக பைலட்டான சேலத்தை சேர்ந்த பிரசாந்த் (25) உதவியுடன் நேற்று மதியம் ஏற்காடு லேடீஸ் சீட் பகுதியில் இருந்து 12.08 மணிக்கு பாரா கிளைடிங்கில் பறந்தார். வானம் தௌிவாக இருந்ததால் எளிதாக பறந்து வந்தார். அடிவாரத்திற்கு 12.53 மணிக்கு வந்தடைந்தார். சுமார் 45 நிமிடங்கள் வானில் பறந்தார். பாரா கிளைடிங் சாகச பயணம் குறித்து ராஜேஷ் கூறியதாவது: தமிழகத்தில் ஏலகிரி மலையில் மட்டும் பாரா கிளைடிங் சோதனை முயற்சி வெற்றியடைந்துள்ளது. ஆனால், சுற்றுலா பயணிகளுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. நடப்பாண்டில் 3வது முறையாக ஏற்காட்டில் இருந்து அடிவாரத்திற்கு பாரா கிளைடிங்கில் வானில் பறந்துள்ளேன். ஏற்காடு மலையை பொறுத்தவரை மிதமான வெப்பத்துடன் கிளைமேட் நன்றாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பறக்க கூட அனுமதிக்கலாம். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஏற்காட்டில் பாரா கிளைடிங் விளையாட்டு குறித்து தெரிவித்தேன். இங்கு பாரா கிளைடிங் அனுமதி குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார். ஏற்காட்டில் பாரா கிளைடிங் அமைப்பதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி