நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மாவட்டத்தில் புதிதாக 4,644 குடியிருப்புகள் கட்டப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, ஜூலை 26: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், இந்த நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில் 4,644 குடியிருப்புகள் கட்டப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதி, கொய்யாத்தோப்பு திட்டப்பகுதி, சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் நகர் பகுதி – 1 மற்றும் 2 மற்றும் வேம்புலி அம்மன் கோயில் தெரு ஆகிய திட்டப்பகுதியில் மொத்தம் ₹205.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1202 அடுக்குமாடி குடியிருப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியவதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கண்டறியப்பட்ட சிதிலமடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு, 2021-22, 2022-23ம் ஆண்டுகளில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ், ₹2,400 கோடி மதிப்பில் 15,000 புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 28 திட்டப் பகுதிகளில் 7,582 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ₹1,608 கோடியே 89 லட்சம் மதிப்பில் 9 ஆயிரத்து 522 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

2024-25ம் நிதியாண்டில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 644 மறு கட்டுமான குடியிருப்புகளும், திருச்சி மாவட்டத்தில் 702 மறு கட்டுமான குடியிருப்புகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1400 புதிய குடியிருப்புகளும், என மொத்தம் ₹ 1146 கோடியே 82 லட்சம் மதிப்பில் 6746 குடியிருப்புகள் நடப்பாண்டில் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் ₹76.87 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் 5 தளங்களுடன் 450 அடுக்குமாடி குடியிருப்புகளும், கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில் ₹61.20 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் 5 தளங்களுடன் 324 அடுக்குமாடி குடியிருப்புகளும், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் நகர் பகுதி 1 மற்றும் 2 திட்டப்பகுதியில் ₹41.30 கோடி மதிப்பீட்டில் தூண் மற்றும் 6 தளங்களுடன் 240 அடுக்குமாடி குடியிருப்புகளும், வேம்புலி அம்மன் கோயில் தெரு திட்டப்பகுதியில் ₹25.78 கோடி மதிப்பீட்டில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 188 அடுக்குமாடி குடியிருப்புகளும், ஆக மொத்தம் ₹205.15 கோடி மதிப்பீட்டில் 1202 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பிரபாகர், இணை மேலாண் இயக்குநர் விஜயகார்த்திகேயன், தலைமை பொறியாளர் லால் பகதூர், நிர்வாகப் பொறியாளர்கள் இளம்பரிதி, வீரவாஞ்சிநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து