நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் வாக்கு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி-கலெக்டர் ஆய்வு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் உள்ள 439 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு 1740 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கான ஏற்பாடுகளை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 4 ஆயிரம் அலுவலர்களுக்கு இதுவரை 2 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 2 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதைத்தொடர்ந்து 37 வார்டுகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதா தலைமையில் நடைபெற்றது. ஆலாம்பாளையம், படவீடு ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள அழியாத மை, எழுது பொருட்கள், பல்வேறு பயன்பாடுகளுக்கான உறைகள், ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பட்டியலின்படி முழுவதுமாக உள்ளனவா என்று ஆய்வு செய்தார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பாதுகாப்பு அறையின் முன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் வேட்பாளர்களின் முன்னிலையில் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். ஆய்வின் போது பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விஜயசங்கர், கிருஷ்ணவேணி ஆகியோர் உடனிருந்தனர்.பள்ளிபாளையம்:பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகளில் படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்களை வாக்கு இயந்திரத்தில் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் இப்பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தலின் போது, வாக்கு சாவடியில் பயன்படுத்தப்படும் அழியாத மை, ரப்பர் ஸ்டாம்புகள், எழுதுபொருட்களையும் அவர் சரிபார்த்தார். வாக்கு இயந்திர அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பணிகள், கண்காணிப்பு கேமரா குறித்தும் அவர் கேட்டறிந்தார். நகராட்சி ஆணையர்கள் பள்ளிபாளையம் கோபிநாத், குமாரபாளையம் சசிகலா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.மோகனூர்: மோகனூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நேற்று நடந்தது. பேரூராட்சி  அலுவலகத்தில் வட்டார பார்வையாளர் ஜெயமாலா, பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கோமதி முன்னிலை வகித்தார். இப்பணிகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அன்பழகன், சந்தோசம், மண்டல அலுவலர் பரமேஸ்வரன், உதவி மண்டல அலுவலர் வனிதா ஆகியோர் மேற்கொண்டனர்….

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்