நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் தண்டையார்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பொதுமக்களிடையே அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தொடங்கி வைத்தார். இதில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் இருதயம், ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், ரவி, பிரான்வின் டேனி மற்றும் உதவி ஆய்வாளர்கள், போலீசார், துணை ராணுவத்தினர் ஊர்வலமாக எண்ணூர் நெடுஞ்சாலை, நேதாஜி நகர், நேதாஜி நகர் பிரதான சாலை, நேதாஜி நகர் மசூதி சாலை, ஏ தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.  தொடர்ந்து வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியிலிருந்து காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் பார்த்தசாரதி ஹவுசிங் போர்டு ரோடு, சிமென்ட் சாலை, எம்.சி.ரோடு வரை ஊர்வலமாக நடந்து சென்றனர். இதன் மூலம் பொதுமக்கள் தேர்தல் நாளன்று அச்சமின்றி வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம் என்பதற்கு ஒரு முன்னோட்டமாக இது நடத்தப்பட்டது. இதேபோல் பதட்டமான பகுதிகளில் படிப்படியாக கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்