நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.7.50 லட்சம் அதிரடி பறிமுதல்

திருவள்ளூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி  ஆவணமின்றி  கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்கின்றனர். அந்த வகையில் திருவள்ளூர், பள்ளிப்பட்டு ஆகிய  ஊர்களில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 7.50 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான  ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் 20 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினர் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக நகை, பணம், ஆபரணங்கள், பரிசுப் பொருட்கள் போன்றவை கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் பறக்கும் படை அலுவலர் லோகநாதன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சாரதி, தலைமைக் காவலர் பிரேமா ஆகியோர் ஈக்காடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் திருவள்ளூரை அடுத்த சின்னமண்டலி கிராமத்தை சேர்ந்த விவசாயி பச்சையப்பன் (39 ) என்பவர் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ரூ.3 லட்சத்தை கைப்பற்றினர். மேலும் போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் ரூ.3 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் திருவள்ளூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே சோதனை சாவடியில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் ரூ.4.50 லட்சம் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையில் விசைத்தறி வாங்க பணத்தை எடுத்து வருவதாக தெரிவித்தார். இருப்பினும், அவரிடம் உரிய ஆவணம் இல்லாதநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பசுபதியிடம் ஒப்படைக்கப்பட்டு சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்….

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு