Saturday, August 3, 2024
Home » தோப்புக்கரணம் பற்றி விஞ்ஞானம் கூறுவது என்ன?

தோப்புக்கரணம் பற்றி விஞ்ஞானம் கூறுவது என்ன?

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் தெளிவு பெறுஓம்  நமது முன்னோர்கள், விநாயகர் வழிபாட்டின், ஒரு பிரதான அங்கமாகத், தோப்புக்கரணம் போடுவதைக் குறிப்பிட்டிருந்தார்கள். தற்காலத்தில் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த அறிஞர்கள் தோப்புக்கரணம் போடுதல்; உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் இன்றியமையாத உடற்பயிற்சியாக உள்ளமையைச் சுட்டிக் காட்டியுள்ளனர். தோப்புக்கரணம் போடும்போது கைகளால், நமது காது மடல்களை இறுகப்பற்றிக் கொள்கின்றோம். காதுமடல் களின் அடிப்பகுதியில், உடலின் எல்லா உறுப்புக்களையும் இணைக்கின்ற புள்ளிகள் உள்ளன. அதனால், காதுமடல்களைக் கைகளினால் பற்றிப் பிடித்துக்கொண்டு, தோப்புக்கரணம், தாழ்ந்து, எழுந்து போடும்போது உடலின் உறுப்புக்கள் அனைத்தும் செயல்படுவதற்கான ஒருவகை தூண்டுதல் கிடைக்கிறது.மேலும் தோப்புக்கரணம் போடும்போது; தாழ்ந்து இருந்து, பின் எழும்போது காலில் உள்ள ‘‘சோலியஸ்’’, எனும் தசை இயங்க வாய்ப்பு ஏற்படுகின்றது. அப்பொழுது, ‘‘சோலியஸ்’’ தசையால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின் தசைகளைப் போன்றே இதுவும் செயல்படுகிறது. இதன்மூலம் நமது தண்டு வடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகிறது. தோப்புக்கரணம் போடுவதால் தினமும் தொடர்ந்து பயிற்சி செய்துவருவதால். மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுகின்றன என்பதை அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்து வௌிப் படுத்தியுள்ளனர். பாடங்களைக் கற்பதில், பின்னடைவில் உள்ள மாணவர்கள் கிரகிக்கும் திறன், நினைவாற்றல், அவற்றின் விளைவாக பரீட்சையில், குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் ஆகியோர் தொடர்ந்து தோப்புக்கரணப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த பின் நல்ல முன்னேற்றம் அடைந்தமை ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது பற்றி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.நமது மூதாதையர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆன்மிக அடிப்படையில் விநாயகருக்கு முதல் வணக்கம் செய்யும்போதே தோப்புக் கரணம் போடவேண்டியதன் முக்கியத்துவத்தைச் சாத்திர நூல்கள் வாயிலாகவும், செயல்முறையாகவும், உணர்த்தியமை வியப்பில் ஆழ்த்துகிறது. அத்துடன் பெருமையாகவும் உள்ளது. இந்துசமய வழிபாடுகள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் அல்ல. அவை தன்னம்பிக்கைகள் என்பதை உணர்த்துவதாகவும் உள்ளன. இந்துசமய நெறிமுறை களில் ஆன்மிகமும், அறிவியலும் இருகண்கள் போன்று, இணைந்தே உள்ளன. பரீட்சைக்கு செல்லும் முன்னர், விநாயகரை வணங்கி. வழிபாடு செய்துவிட்டு; மாணவர்கள் நம்பிக்கையோடு பரீட்சை மண்டபத்தை நோக்கித் தைரியத்துடன் சென்று; பரீட்சை எழுதி, வெற்றி பெறுவதற்கான காரணம் இப்பொழுது புரிகின்றதல்லவா! ‘நம்பினாற் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு’’. இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்.அமெரிக்க உடற்கூற்று வைத்தியர், எரிக்றொபின்ஸ், தோப்புக்கரண பயிற்சியால், மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் உசுப்புப் பெற்று, சக்தி பெறுகின்றன என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்து கூறுகின்றார். படிப்பில் பின்தங்கி, பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தோல்வியடைந்த மாணவர்கள் தோப்புக்கரணப் பயிற்சியின்பின், நல்ல மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறுகிறார்.யேல் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர், யூஜினியஸ் அங் என்பவர் தோப்புக்கரணம் போடுவதால், அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன், மூளைக் கலங்களும் சக்தி பெறுவதாக கூறுகின்றார்.வெளிநாடுகளில், ‘‘SUPER BRAIN YOGA”, ‘‘அதிசக்தி மூளை யோகா’’ எனத் தோப்புக்கரணம் அழைக்கப்படுகிறது.நம்முன்னோர்கள், விநாயகப்பெருமானை தினசரி வழிபாடு செய்வதற்கான பிரதான முறையாகத் தோப்புக்கரணம் போடுவதை நியமமாகக் கொண்டனர். இதன்மூலம், நாம் விநாயகப்பெருமானின் அருளையும், உடல்நலம், உளநலம், ஆன்மநலம், நீளாயுள் என்பவற்றையும்; தோயற்றவாழ்வையும்; அறிவுநலம், ஞானநலம் இணையப்பெற்ற கல்விநலம் மற்றும் செல்வங்கள் அனைத்தையும் பெறலாம்.தோப்புக் கரணம் பற்றிய, புராண வரலாற்று விவரணம்பிள்ளையார் முன்னிலையில் நின்று, தோப்புக்கரணம் போடும் முறையை, உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தவர், மகாவிஷ்ணு, என்று ஒரு புராண வரலாற்றுக் கதை உள்ளது. ஒருமுறை, மகாவிஷ்ணு வினுடைய சக்கராயுதத்தை அவருடைய மருமகன் விநாயகர், விளையாட்டாகப் பிடுங்கி, உடனே அதனைத் தமது வாய்க்குள் போட்டு வாயை மூடிக் கொண்டார். எல்லோருக்கும் செல்லப் பிள்ளையான, விநாயகரிடமிருந்து சக்கரத்தை திரும்பப் பெறுவது என்பது முடியாத காரியம். அத்துணை வலிமை மிக்கவர் விநாயகர். அவரை மிரட்டியோ, கடிந்து பேசியோ சக்கரத்தை மீட்பதும், சாத்தியமில்லை. அவ்வேளை சாதுரியமாக, விநாயகர் வசமுள்ள சக்கரத்தை, மீட்பதற்கு மகாவிஷ்ணுவுக்கு ஒரு யுக்தி தோன்றியது.பிள்ளையார் சிறு குழந்தையாக இருப்பதால்; அவரை வாய்விட்டுச் சிரிக்கவைத்துக், குதூகலப்படுத்தினால் அந்த மகிழ்ச்சியில் அவர் வாயைத் திறப்பார். அப்பொழுது அவரின் வாயில் இருந்து சக்கரம் கீழே விழும். அப்பொழுது விரைந்து சென்று சக்கரத்தை எடுத்துக் கொள்ளலாம்; என்பது தான் மகாவிஷ்ணு மனதில் உதித்தயுக்தியாகும். அக்கணமே, மகாவிஷ்ணு, தமது நான்கு திருக்கரங்களாலும், தமது காதுகளை மாறி இறுகப் பற்றிக்கொண்டு; மேலும் கீழுமாக இருந்தும், எழுந்தும் நடனம் புரிந்தார். இந்த விசித்திர நடனத்தைக் கண்ட விநாயகர் விழுந்து, விழுந்து சிரித்தார். வாய்விட்டுச் சிரிக்கும்போது சக்கரம் அவரின் திருவாயில் இருந்து, நழுவிக், கீழே விழுந்தது. தருணம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, உடனே சக்கரத்தை எடுத்துக் கொண்டார்.‘‘தோர்பி’’ ‘‘கர்ணம்’’ என்னும் இரு சொற்கள் இணைக்கப்பெற்றுத், ‘‘தோப்புக்கரணம்’’, என்ற சொல், உருவாக்கம் பெற்றது என அறிஞர்கள் விளக்குவர். ‘‘தோர்பி’’ என்னும் சொல்லின் பொருள், ‘‘கைகளினால்’’ என்பதாகும். ‘‘கர்ணம்’’ என்றால் காது என்று பொருள். எனவே, ‘‘தோர்பி கரணம்’’ ‘‘தோப்புக்கரணம்’’ ஆக மருவிற்று என்பர். தோப்புக்கரணம் என்றால் கைகளினால் காதுகளைப் பிடித்துக் கொள்வது என்று அர்த்தம்.தொகுப்பு : நாகலட்சுமி

You may also like

Leave a Comment

seventeen + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi