தொழில்முனைவோர் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 5: புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறிய அளவிலாள ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான தொழில்முனைவோர் ஆலோசனை கூட்டம் வரும் 18ம்தேதி நடக்கிறது என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2 கோடியே 50 லட்சம் இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.

மேலும், அதிகளவில் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், அனைத்து தொழில்முனைவோர்களும் முன்வரவேண்டும். இது தொடர்பாக ஆலோசிக்கும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 18ம் தேதி காலை 11.30 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல்துறை, மண்டல துணை இயக்குநர் அலுவலகம், எண்: 30/3 நவலடியான் வளாகம், முதல் தளம், தாந்தோணிமலை, கரூர் -639005 என்ற முகவரியிலோ அல்லது 04324-299544, 7397556156 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை