தொழில்நுட்பங்களை பின்பற்றினால் எள் சாகுபடியில் ஏக்கருக்கு 800 கிலோ வரை மகசூல் பெறலாம்-ஈரோடு வேளாண் வல்லுநர் தகவல்

ஈரோடு : எள் சாகுபடியில் உயரிய தொழில்நுட்பங்களை பின்பற்றினால்  ஏக்கருக்கு 800 கிலோ வரை மகசூல் பெறலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்மை அறிவியல்  நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சரவணகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் மேலும் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர்  பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இயற்கை மருத்துவத்தில்  பல்வேறு மகத்துவம் பெற்ற பயிராக எள் பயிர் கருதப்படுகிறது. எள் பயிரானது  இறவை பட்டமான மாசி மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. எள் பயிரை  பொருத்தவரை தண்டு புழுக்கள் மற்றும் காய்ப்புழுக்கள் பெரும் சேதாரத்தை  ஏற்படுத்த கூடியன. இந்த பூச்சிகளின் தாக்குதலினால் புதிய துளிர் வருவது  நின்று, பயிர் வாடி விடுகின்றன. காய்ப்புழுக்கள் காய்களை துளைத்து சேதத்தை  விளைவிக்க கூடியது. பச்சைப்பூ நோய், வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இது  தத்து பூச்சிகள் மூலம் பரவுகிறது. இந்த நோய் தாக்கிய செடிகளில் பூக்களும்  இலைபோல காட்சியிளப்பதால், காய்கள் உற்பத்தி தடைபடுவதுடன் செடிகள்  மலட்டுத்தன்மை அடைந்து, மகசூல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. எள்  சாகுபடி செய்வதற்கு முன் தேர்வு செய்த நிலத்தை நன்கு புழுதிபட 4 முதல் 5  முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது 5 டன் தொழு உரத்தை அடியுரமாக  இட்டு உழவை மேற்கொள்ளலாம். இதன்மூலம், மண்ணில் இருந்து சீரான இடைவெளியில்  பயிருக்கு சத்து செல்வதை உறுதி செய்ய முடியும். 10 அல்லது 20 சதுர மீட்டர்  பரப்பளவுக்கு பாத்திகள் அமைத்து விதைப்பதன் மூலம் பயிர் எண்ணிக்கையை  பராமரிக்கலாம். ஒரு ஏக்கரில் விதைப்பினை மேற்கொள்ள 2 கிலோ விதை  தேவைப்படும். தேர்வு செய்யப்பட்ட விதைகளை விதைப்பதற்கு முன்பு சூடோமோனாஸ்  பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி  செய்து விதைக்கலாம். இதனால் விதை மூலமாக பரவும் நோய்களை எளிதில்  கட்டுப்படுத்தலாம். விதை நேர்த்தி செய்ய இயலாத பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு  800 கிராம் அசோஸ்பைரில்லத்தை மணல் அல்லது குப்பையுடன் கலந்து நேரடியாக  வயலில் இட வேண்டும். விதைப்பு மேற்கொண்ட 20 மற்றும் 40வது நாட்களில் களை  எடுப்பதன் மூலம் பயிர்கள் செழிப்பாக வளர உதவலாம். இறவை சாகுபடியில் ஒரு  ஏக்கருக்கு அடிப்படையில் 53 கிலோ காம்ப்ளக்ஸ் உரம், 30 கிலோ யூரியா, 55  கிலோ சூப்பர் பாஸ்பேட், 15 கிலோ பொட்டாஷ் வீதம் எள் பயிருக்கு வழங்க  வேண்டும். மேலும், காய் பிடிப்பு திறனை அதிகரிக்க 2 கிலோ மாங்கனீசு சல்பேட்  உரத்தை போதிய அளவு மணல் கலந்து சீராக தூவி விட வேண்டும். எள் பயிரின்  இலைகள் மற்றும் தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறுவது அறுவடைக்கான அறிகுறிகள்  ஆகும். இவ்வாறு முற்றிய பயிர்களை அறுவடை செய்து, சூரிய ஒளியில் உலர்த்த  வேண்டும். பின்னர் காய்களை பிரித்தெடுக்கலாம். இந்த உயிரி தொழில்நுட்பங்களை  பின்பற்றுவதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ வரை எள் மகசூல் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை