தொழில்துறையில் அபாரம்

தமிழகத்தில் தொழிற்துறையின் வளர்ச்சி எப்போதுமே திமுக ஆட்சிக்காலத்தை சார்ந்தே அமைந்திருக்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்கிற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதை உள்ளடக்கி திராவிட மாடல் வளர்ச்சி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி என்பதற்காக ஏதோ சென்னை நகரத்தை மட்டும் தொழில் துறை சார்ந்திராமல், தமிழகத்தின் 2ம், 3ம் கட்ட நகரங்களில் கூட தொழில் வளர்ச்சிக்கு திமுக ஆட்சிக்காலங்களில் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன. தகவல் தொழில்நுட்பம் இன்று இந்தளவுக்கு வளர திமுக ஆட்சியே காரணமாகும். 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ஒரு அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது. சென்னை தரமணியில் டைடல் பூங்கா, அதை தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என 19 இடங்களில் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன. 96ம் ஆண்டு தொடங்கிய திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை சிறுசேரியில் மகளிருக்கான முதல் உயிரியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. உலக மென்பொருள் மையங்களில் ஒன்றாக சென்னை இன்று திகழ்வதற்கு திமுக ஆட்சி பெரும் பங்காற்றியது என்பதை யாரும் மறுக்க முடியாது.இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் 25 சதவீத வளர்ச்சிக்கு தமிழ்நாடுதான் காரணகர்த்தாவாக திகழ்கிறது. தமிழக அரசின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்தால், அடுத்து வரும் காலங்களில் தொழில்துறை வளர்ச்சி மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என தோன்றுகிறது. சென்னை டைடல் பார்க்கில் ரூ.212 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காக்களில் 2 ெதாழில் புத்தாக்க மையங்கள், திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் தொழிற்துறை வெற்றி நடை போடுவதை மீண்டும் உறுதி செய்யும். தமிழக முதல்வரே சுட்டிக்காட்டுவது போல நான்காம் தலைமுறைக்கான தொழில் மூலதனம் நம்மிடையே இருக்கிறது. அதற்கான திறன் மேம்பாடுகளை அடைய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இப்படியே சென்றால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி உலக அரங்கில் மிளிரும் என்பதில் சந்தேகமில்லை….

Related posts

எண்ணமெல்லாம் இங்கேதான்

காலத்தின் அவசியம்

வரம்பு மீறல் கூடாது