தொழிலாளி கொலை வழக்கில் கைதான தாய் மகன் குற்றவாளி தண்டனை விவரம் 12ம் தேதி அறிவிப்பு

தூத்துக்குடி, பிப். 9: புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கீழத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்ற ஜெயபாலன்(45). கூலித் தொழிலாளி. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த அழகுலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 23.7.2013ல் ஜெயபாலன், அழகுலிங்கத்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அழகுலிங்கம், அவரது மனைவி மல்லிகா, மகன் சுயம்புலிங்கம், 14 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து ஜெயபாலனை அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற கண்ணனின் மனைவி தங்கஜோதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தில் கண்ணன் என்ற ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து அழகுலிங்கம் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது, அழகுலிங்கம் இறந்து விட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் தொடர்பான விசாரணை சிறார் நீதிக்குழுமத்தில் தனியாக நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பிலிப் நிக்கோலஸ்அலெக்ஸ், குற்றம்சாட்டப்பட்ட மல்லிகா, அவரது மகன் சுயம்புலிங்கம் ஆகிய 2 பேரையும் குற்றவாளி என்றும், இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 12ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆனந்த்கேபிரியேல்ராஜ் ஆஜரானார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்