தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி: உதவி ஆணையர் தகவல்

பொன்னேரி, ஜூலை 25: கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பம் உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து கலந்து கொண்டு பயன்பெறலாம் என உதவி ஆணையர் அ.செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். பொன்னேரியில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அ.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உடலுழைப்பு தொழிலாளர் தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டத்தை இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உள்பட 18 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், மேற்படி நலவாரியங்களில் உறுப்பினர்களாக சேர https://tnwwwb.tn.gov.in இணைதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு பெற்ற பின்னர் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, வீட்டுவசதி திட்டம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம், பணியிடத்து விபத்து, மரணம், முதலான நிதியுதவி கோரி பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதியுதவித் தொகை தொழிலாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சார்பில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களில் கொத்தனார், கம்பி வளைப்பவர் மற்றும் எலெக்ட்ரீசியன் ஆகிய பிரிவுகளில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் மற்றும் 3 மாத திறன்பயிற்சி 6.8.2024 முதல் தமிழ்நாடு கட்டுமான பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தொழிலாளர்கள் அசல் நல் வாரிய அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்பு திட்டம்) அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம், கொக்குமேடு பொன்னேரி – 601024 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும் என அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு