தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை: திருப்பூர் கோட்டத்தில் 84.25 சதவீத பஸ்கள் இயக்கம்

 

திருப்பூர், ஜன.10: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசின் தீவிர நடவடிக்கையால் திருப்பூர் கோட்டத்தில் 84.25 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிஐடியு உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அதில் தீர்வு காணப்படவில்லை.

இதனையடுத்து சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கங்கள் திட்டமிட்ட படி நேற்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
ஆனால், தமிழக அரசு பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அனைத்து பஸ்களும் இயக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி, மாலை 3 மணி நிலவரப்படி திருப்பூருக்கு கோட்டத்திற்கு வரும் காங்கயத்தில் 98.7 சதவீத பஸ்களும், பல்லடத்தில் 74.8 சதவீத பஸ்களும், உடுமலையில் 84 சதவீத பஸ்களும், திருப்பூரில் 1 டெப்போவில் 70.4 சதவீத பஸ்களும், திருப்பூர் 2 டெப்போவில் 75.4 சதவீத பஸ்களும், பழனியில் 1 டெப்போவில் 78.7 சதவீத பஸ்களும், பழனியில் 2 டெப்போவில் 100 சதவீத பஸ்களும், தாராபுரத்தில் 100 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக திருப்பூர் கோட்டத்தில் 84.25 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்