தொப்பூர் கணவாயில் மஞ்சள் மூட்டை ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து-போக்குவரத்து பாதிப்பு

நல்லம்பள்ளி : தொப்பூர் கணவாய் பகுதியில், மஞ்சள் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் அதிக அளவில் விபத்துகள் நடந்து வருகிறது. விபத்துகளை குறைக்க, நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், இதுவரை விபத்துகள் குறையவில்லை. நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையை மாற்றி அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தாததால், விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகவே உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட கோர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையை மாற்றி அமைப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அதன் பிறகு கடந்த 3 மாத காலத்தில், 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு 3பேர் உயிரிழந்தனர்.நேற்று அதிகாலை 2 மணியளவில், மகாராஷ்டிராவில் இருந்து சென்னிமலைக்கு, மஞ்சள் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, தொப்பூர் கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. லாரியை சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா(26) ஓட்டி வந்தார். இவருடன் மாற்று டிரைவரும் வந்துள்ளார். அப்போது பிரேக் பிடிக்காததால், முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. லாரி கவிழ்ந்ததால் மஞ்சள் மூட்டைகள் அனைத்தும் சாலையில் கொட்டியது. காலை 10 மணிவரை லாரி மற்றும் மஞ்சள் மூட்டைகள், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்படாததால், சுமார் 5கிலோ மீட்டர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் 11மணியளவில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி