தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 200 தொகுதிக்கு மேல் வெற்றி என்ற இலக்கை அடைந்தே தீருவோம்

சென்னை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம் நவம்பரில் தொடங்கி டிசம்பரில் நிறைவடைந்த இந்தக் காணொலிக் கூட்டங்களை ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். எப்போது விடியல் வரும் என்ற அவர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்புமே நாளுக்கு நாள் திமுகவிற்கு பொங்கிப் பெருகி வரும் ஆதரவு, நாடாளுமன்றத் தேர்தல் களம் போலவே, சட்டமன்றத் தேர்தல் களத்திலும் பெருவெற்றியைத் தரும் என்பதை, உளவுத்துறையினர் அளித்துள்ள அறிக்கைகள் வாயிலாகவும்- மக்களின் வெறுப்பு மற்றும் எதிர்ப்பலைகள் வாயிலாகவும் அதிமுக ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் திமுகவிற்கு எதிரான அவதூறுகளைப் பரப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.  கிராமசபைக் கூட்டங்களை திமுக நடத்தக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அரசு, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வாயிலாக உத்தரவிடுகிறது. கிராமசபைக் கூட்டங்கள் இப்போது ‘மக்கள் கிராம சபை’ என மகத்தான மறு வடிவத்தைப் பெற்றிருக்கிறது. நாம் நடத்தி, மக்கள் பங்கேற்பது என்ற நிலை மாறி, மக்கள் அழைக்க நாம் பங்கேற்கும் நிலையை எட்டியுள்ளது. அதன் அடுத்தகட்டமாக நாளை (இன்று), கிராமசபைக் கூட்டங்களைத் தடுக்க நினைத்து, திமுக நிர்வாகிகளை, காவல்துறையினரை ஏவிக் கைது செய்த உள்ளாட்சித் துறை அமைச்சர்-முதல்வரை மிஞ்சி செயல்படும் சூப்பர் முதல்வராக நினைத்துக் கொண்டிருக்கும் ஊழல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூரில் நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன்.அதனைத் தொடர்ந்து, ஈரோடு மேற்குத் தொகுதியிலும், அதனையடுத்து எதிர்கால ஒளிவிளக்காம் மாணவர்களின் வாழ்வை இருளாக்குவதையே தனது 24 மணி நேரச் செயல்பாடாகக் கொண்டிருக்கும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். குட்கா விஜயபாஸ்கர் என்றால் குழந்தைகள்கூடச் சொல்லுமளவுக்கு, ஊழலே வாழ்வாகக் கொண்டிருக்கும் அமைச்சரின் விராலிமலைத் தொகுதியிலும், மக்களின் பசியைத் தீர்க்கும் உணவிலும்கூட ஊழல் செய்து ஏழைகளின் வயிற்றில் அடித்து, தன் வசதிகளைப் பன்மடங்கு பெருக்கியிருக்கும் அமைச்சர் ‘கமிஷன் ராஜ்’ ஆன காமராஜ் எனப்படுபவரின் நன்னிலம் தொகுதியிலும் நடைபெறவுள்ளன மக்கள் கிராமசபைக் கூட்டங்கள். ஊழலில் முதலிடம், கொள்ளையில் முதலிடம், கஜானாவை காலி செய்வதில் முதலிடம் என எல்லாவகையிலும் மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பிடித்துள்ள அ.தி.மு.க ஆட்சியில், ஊழல் அமைச்சர்களில் யாருக்கு முதலிடம் என்பதில் அத்தனை பேருமே முதலமைச்சருடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திடவும், மக்கள் விரோதிகளான இந்த அமைச்சர்களை தேர்தல் களத்தில் மக்களே தண்டித்துப்  படுதோல்வி அடையச் செய்யும் வகையிலும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் எழுச்சியுடன் தொடர்கின்றன. இருண்ட தமிழகத்திற்கு மீண்டும் வெளிச்சம் கொண்டுவர திமுகவால் முடியும் என்பதை மக்கள் உறுதியுடன் நம்புகிறார்கள். வெளிச்ச விளக்குகளை ஊதி அணைத்துவிடலாம் என அதிகாரத்தில் இருப்பவர்கள் கைகோர்த்துச் செயல்படுகிறார்கள். அது அவர்களால் முடியவே முடியாது. ஏனென்றால், உதயசூரியன் என்ற உலகின் ஒளிவிளக்கை எவராலும் ஊதி அணைத்துவிட முடியாது. புத்தாண்டில் புது விடியல் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்கிற இலக்கை நாம் அடைந்தே தீருவோம்! நமது உழைப்பால், ஒற்றுமையால், தோழமைக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பால், இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடுமே. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. உதய சூரியன் என்ற உலகின் ஒளிவிளக்கை எவராலும் ஊதி அணைத்துவிட முடியாது….

Related posts

சொல்லிட்டாங்க…

குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : வேல்முருகன்

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி