தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா: பிரம்மாண்ட 2 தேர்களை தலையிலும் தோளிலும் சுமந்து சென்ற பக்தர்கள்

தொட்டியம், ஏப்.7: திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள், பிரம்மாண்ட 2 திருத்தேர்களை முக்கிய வீதிகள் வழியாக தூக்கிச் சென்றது காண்போரை பிரமிக்க செய்தது. திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் கடந்த மாதம் காப்பு கட்டுதல் உடன் திருவிழா தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தினசரி அம்மனுக்கு பூச்சொரிதல், புனித நீர் எடுத்து வருதல், அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக நேற்று தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி கோயில் முன்பு பிரம்மாண்ட 2 திருத்தேர்கள் அலங்கரிக்கப்பட்டது. சுமார் 32 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஓலை பிடாரியம்மன், 30 அடி உயரமுள்ள மற்றொரு திருத்தேரில் மதுரைக்காளியம்மன் எழுந்தருளினர். அப்போது விவசாயம் செழிக்க வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மிகப்பெரிய 2 திருத்தேர்களையும் பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்தனர். பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு தேங்காய் பழம் படைத்து சுவாமியை வழிபட்டனர். தேர் திருவிழாவையொட்டி திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை