தொடர் மழையினால் பயிர் சேதம் கணக்கெடுப்பு பணி தொடக்கம் வேளாண் அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஆக.9: வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் பயிர் சேதம் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், வரும், 10, 11ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி முதல் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், இரவு நேரங்களில் மழை பெய்கிறது. தொடர்ந்து, 3 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் காட்பாடி, பொன்னை, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் தொடர் மழையினால் சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளனர். இக்குழுவினர் சேதமடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்படும். பின்னர், மாநில அரசு அறிக்கை அனுப்பி வைத்து விவசாயிகளுக்கு பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது