தொடர் கனமழையால் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது

*வீடுகள் இடிந்தன*மரங்கள் முறிந்து விழுந்தனஊட்டி : நீலகிரியில் தொடரும் கனமழை எதிரொலியால் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் வாழைகள், காய்கறி பயிர்கள் கடும் சேதமடைந்து, ஊட்டி, பந்தலூர் பகுதி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி தொடர்ந்து 3 மாதங்கள் பெய்யும். இம்முறை ஜூன் மாதம் பருவமழை பொய்த்த போதிலும் கடந்த மாதம் துவங்கி தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், குந்தா, ஊட்டி போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.இதுதவிர, எந்நேரமும் சாரல் மழையும் காணப்படுகிறது. இதனால், கடும் குளிர் நிலவுகிறது. காற்று வீசி வருவதால், மரங்கள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் எச்பிஎப்., அருகே சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்தது. இதனை உடனடியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதனால், இவ்வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.மேலும், தலைகுந்தா, கல்லட்டி, கிளன்மார்கன், குளிச்சோலை, மகாராஜா சாலை, அப்பர்பவானி, அவாலஞ்சி, கிண்ணக்கொரை போன்ற பகுதிகளில் மரங்கள் விழுந்தன. எனினும், பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இப்பகுதிகளில் விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் துரிதமாக செயல்பட்டு அகற்றினர்.இருப்பினும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க துவங்கி, விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால், அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி ேதாட்டங்களுக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகள் உள்ள அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.சற்று இடைவெளியிட்டு, மீண்டும் தொடர்ந்த கன மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குறைந்தே காணப்பட்டனர்.மழை மற்றும் குளிரால், உள்ளூர் மக்களும் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகக்கு நேற்று மூன்றாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்றும் காலை முதல் கூடலூர், பந்தலூர், ஊட்டி மற்றும் மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில் நேற்று ஊட்டி 74, நடுவட்டம் 152, கல்லட்டி 44, கிளன்மார்கன் 71, குந்தா 40, அவலாஞ்சி 200, எமரால்டு 60, கெத்தை 33, கிண்ணக்கொரை 37, அப்பர்பவானி 140, குன்னூர் 28. பர்லியார் 24, கோத்தகிரி 56, கூடலூர் 75, தேவாலா 181, பந்தலூர் 110 மிமீ என நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 1957 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது. சராசரியாக 67.50 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது. விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது: நீலகிரி மாவட்டம், பந்தலூரில்  கடந்த சில நாட்களாக தொடர்மழை  பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில்  பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நீர் நிலைகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால்,  தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழைவெள்ளம் புகுந்து விடுமோ? என  அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். கனமழையால்  பந்தலூர்  அருகே சேரங்கோடு  ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பள்ளி ஸ்கூல் ரோடு  பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி துரைசாமி என்பவர் வீடு இடிந்து  விழுந்து சேதமடைந்தது. ஆனால், அசம்பாவிதம் எதுவும் அதிர்ஷவசமாக ஏற்படவில்லை.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சேரம்பாடி ஆர்ஐ விஜயன் மற்றும்  வருவாய்த்துறையினர் சென்று பார்வையிட்டு சேதம்  குறித்து ஆய்வு செய்தனர்.அம்பலமூலா  வெள்ளேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள விவசாய  நிலத்தில் மழை நீர் புகுந்து வாழை தோட்டம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து  காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து  விவசாய பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் கவலை  அடைந்துள்ளனர். மேலும் வெள்ளேரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்திற்கு மேல்  தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். நெலாக்கோட்டை அருகே  9ம் மைல் பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு  கூலித்தொழிலாளிகள் அப்துல் ரஹ்மான், மோகன்ராஜ் ஆகியோரின் வீடுகள்  பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர் மழை பெய்தால் மேலும் பாதிப்பு ஏற்படும்  நிலை உள்ளது. ஆமைக்குளம் காலேஜ் அருகே முகம்மது என்பவரது வீட்டின் மீது  மரம் விழுந்து சேதமடைந்தது. மேலும் மின்கம்பிகள் அறுந்து அப்பகுதியில்  மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகள்  ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.பயணிகளின்றி வெறிச்சோடிய ஊட்டி மலை ரயில்நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனாலும் மழை காரணமாகவும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக சரிந்துள்ளது. இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.  மேலும் ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறைகள் பயணிகளின்றி காலியாக உள்ளன.ஓரிரு சுற்றுலா பயணிகள் மட்டுமே ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கம்போல இல்லாததால், ஊட்டி – குன்னூர் – மேட்டுபாளையம் மற்றும் ஊட்டி – குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் கூட்டம் வெகுவாக குறைந்தது. இந்த ரயிலில் மிக குறைவான சுற்றுலா பயணிகளே பயணித்தனர். குறிப்பாக 2ம்வகுப்பு முன்பதிவு பெட்டிகள் காலியாக இயக்கப்படுகின்றன. இதனால் ஊட்டி மலை ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.ஏரியில் மிதிபடகு சவாரி ரத்துநீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்துள்ளது. ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நேற்று ஊட்டி ஏரியில் மிதி படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. அதேசமயம், படகு இல்லத்திற்கு குறைந்தளவே சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், ஒரு சில மோட்டார் படகுகள் மட்டுமே இயக்கப்பட்டன….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா